×

சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த கன்னடியன் கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி செல்லிபுரத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கன்னடியன் கால்வாய் பாலத்தை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேரன்மகாதேவி ரயில்வேகேட் தென்புறம் கன்னடியன் கால்வாயின் மறுகரையில் செல்லிபுரம் தெரு உள்ளது. இப்பகுதியில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் வசதிக்காக பொதுப்பணித்துறை மூலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடியன் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அடிப்பகுதி முழுவதும் பாறாங்கற்கள் மூலம் கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் வழியாக பொதுமக்கள் கடந்து வந்தனர்.

பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக இப்பகுதியில் எந்த ஒரு சீரமைப்பு பணியும் நடைபெறாததால் பாலத்தின் கைப்பிடிச்சுவர் முழுவதும் உடைந்து ஆபத்தான நிலையில் பொதுமக்கள் இப்பாலத்தை கடந்து வந்தனர். தற்போது இந்த பாலத்தின் மேல்புறம் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் பாலம் தனது ஸ்திரத்தன்மையை மெல்ல இழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பெண்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது.

தற்போது கோடைகாலம் என்பதால் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டால் பணிகள் விரைந்து முடிக்க ஏதுவாக அமையும். எனவே விபத்து நிகழும் முன்னர் பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரிடையாக ஆய்வுசெய்து சீரமைக்கவோ அல்லது அதே இடத்தில் புதிய பாலம் கட்டவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

The post சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த கன்னடியன் கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kannadian Canal Bridge ,Seranmagadevi ,Weeravanallur ,Tarakori ,Kanadian Canal Bridge ,Seranmagadevi Sellipuram ,Sellipuram Street ,Kanadian Canal ,Seranmagadevi Railway ,Canadian Canal Bridge ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவியில் குற்றசம்பவங்களை...