சென்னை: ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர்; நான் சாதாரண மனிதன்தான் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் முதல் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவென்ட் அப்பல்லோ அரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட “வேலியண்ட்” சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இன்று அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசைஞானி இளையராஜா; தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் என்னை வரவேற்க உத்தரவிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் மகிழ்வான இதயத்தோடு என்னை வழியனுப்பி வைத்ததால் வெற்றி கிடைத்தது. லண்டனில் முறையான ஒத்திகைக்குப் பின்னரே சிம்பொனி இசை அரங்கேற்றம் நடைபெற்றது.
மகிழ்வான இதயத்துடன் என்னை நீங்கள் வழியனுப்பி வைத்ததே சிம்பொனி நிகழ்ச்சி வெற்றி பெற காரணம். தனது சிம்பொனி இசையை மூச்சு விடுவதை கூட மறந்து ரசிகர்கள் ரசித்தனர். சிம்பொனி 4 மொமண்ட்களைக் கொண்டது. சிம்பொனி முடியும் வரை யாரும் கைதட்டக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், ரசிகர்களும் பொதுமக்களும் முதல் மொமண்ட் முடிந்ததும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். ரசிகர்கள் உற்சாகத்தை மேடையில் இருந்த இசைக் கலைஞர்களே மிகவும் வியப்பாகப் பார்த்தனர். ரசிகர்கள் இசை தெய்வம் என அழைக்கின்றனர்; நான் சாதாரண மனிதன் தான்.
என்னை இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்வதை கேட்கும்போது.. இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே என்றுதான் எனக்குத் தோன்றும். 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன். 82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான், இந்த சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். அக்.6-ல் துபாயிலும் செப்.6-ல் பிரான்சிலும் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன் என்று கூறினார்.
The post ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர்; நான் சாதாரண மனிதன்தான்: இசைஞானி இளையராஜா appeared first on Dinakaran.