புதுடெல்லி: மும்பையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சரக்கு மற்றும் சேவை(ஜிஎஸ்டி) வரி விகிதங்களை சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜிஎஸ்டி 2.0 வெறும் விகித குறைப்பாக மட்டுமில்லாமல் விரிவாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த குறைப்புகள் வெறும் விகித குறைப்பாக இல்லாமல் விரிவான சீர்திருத்தமாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஒத்து கொண்டதுபோல, சரக்கு மற்றும் சேவை வரி செஸ்கள் உள்பட 100 வெவ்வேறு விகிதங்களை கொண்டுள்ளது. இந்த சிக்கலானது வணிகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரத்துவம் மீதான இணக்க சுமையை அதிகரிக்கிறது.
வரி விகிதங்களின் பெருக்கம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை எளிதாக்கி உள்ளது. இது நிதியாண்டு 23ல் பதிவான ரூ.1.01 லட்சம் கோடியை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம். மேலும் 18,000 மோசடி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல மோசடி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். பாப்கார்ன் மீதான 3 விகித வரி அமைப்பை சீர் செய்யாமல், ஸ்வீட் கேரமல் பாப்கார்ன் மீதான வரியை மட்டும் குறைப்பது ஒரு ஏமாற்று வேலை. எனவே ஜிஎஸ்டி 2.0,-ன் முதல் நோக்கம் வரி அடுக்குகளை எளிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டியில் கொண்டு வரப்படும் எந்தவொரு மாற்றமும் வெறும் விகித குறைப்பாக இல்லாமல் விரிவானதாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
The post குறைத்தால் மட்டும் போதாது ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான சீர்திருத்தம்: காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.