தாம்பரம்: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி இயக்கப்படும் மின்சார ரயில்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக, நேற்று காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வரை இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், பயணிகள் வசதிக்காக தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், மாலை 4.10 மணிக்கு மேல் வழக்கம்போல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் எனவும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் பேருந்தில் செல்வதற்காக கூடியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் அதிகளவில் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அதில் பயணம் செய்து, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். இருப்பினும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால் சிறப்பு ரயில்களை பிடிப்பதற்கு ரயில் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
மதியம் 12 மணி முதல் 2 மணி வரை முழுமையாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திற்கு சென்று பின்னர் பேருந்து மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். ரயில் சேவை ரத்து காரணமாக பலர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் சென்றதால், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் மிகுந்து காணப்பட்டது. 4:10 மணிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல துவங்கப்பட்டு படிப்படியாக பொதுமக்களின் கூட்ட நெரிசலும் குறைய தொடங்கியது.
The post மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்: ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல் appeared first on Dinakaran.
