- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திமுக
- காஞ்சி
- வடக்கு மாவட்டம்
- Nemmeli
- மாமல்லபுரத்தில்
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- சென்னை
- காஞ்சி வடக்கு மாவட்டம்
- 2026 சட்டமன்றத் தேர்தல்கள்…
* 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார், பிரமாண்ட ரோடு ஷோவிலும் நாளை பங்கேற்கிறார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சி வடக்கு மாவட்ட திமுகவினருடன் மாமல்புரம் நெம்மேலியில் இன்று காலை கலந்துரையாடுகிறார். இதில் 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்குகிறார். நாளை பிரமாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளை என 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்து இசிஆர் சாலை பூஞ்சேரி வழியாக ஓஎம்ஆர் சாலை-பையனூர் வருகிறார். காலை 10 மணியளவில் பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையை அவர் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மீண்டும் பூஞ்சேரி வழியாக இசிஆர் சாலை நெம்மேலியை வந்தடைகிறார். அங்கு உள்ள நெம்மேலி லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று கட்சியினருடன் கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர. பகுதி, பேரூர், பகுதி செயலாளர்கள், மாநகர வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் கட்சியினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கலந்துரையாடுகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார். தொடர்ந்து அவர் கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவது தொடர்பான வியூகங்கள், ஆலோசனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு இன்று இரவு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
நாளை காலை 9 மணியளவில் இசிஆர் சாலை- பூஞ்சேரி வழியாக வந்து திருக்கழுக்குன்றத்தில் ரோடு ஷோ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் திருப்போரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய நகர, பேரூர் திமுகவினர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் தொடர்ந்து நாளை காலை 9.30 மணியளவில் திருக்கழுக்குன்றம் சாலை வழியாக செங்கல்பட்டு வந்தடைந்தடைகிறார். பின்னர் இராட்டினக்கிணறு சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதி முதல்-சிஎம்சி மருத்துவமனை மற்றும் திருமணி சந்திப்பு வரை ரோடு ஷோ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இதில் செங்கல்பட்டு, ஆலந்தூர், திருப்பெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய 5 தொகுதியில் உள்ள ஒன்றிய நகர பேரூர் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் 1000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post மாமல்லபுரம் நெம்மேலியில் இன்று காலை காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.கவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் appeared first on Dinakaran.