×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் உரசி தீப்பற்றியது: 194 பேர் உயிர் தப்பினர்

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு, 186 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 194 பேருடன் வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உராய்ந்து, தீப்பொறி பரவிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 194 பேரும் உயிர் தப்பினர்.

மும்பையில் இருந்து இருந்து 186 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றுமுன்தினம் பகல் 1.47 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியபோது, விமானத்தின் வால் பகுதி, ஓடுபாதையில் உராய்ந்து தீப்பொறி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி, மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக அது நிற்க வேண்டிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். விமானத்தில் இருந்த 186 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 194 பேர் உயிர் தப்பினர்.

இந்த விமானம் வழக்கமாக மும்பையில் இருந்து பகல் 1.50 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, பிற்பகல் 2.59 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்கி பின்பு, அந்த விமானம், விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது. அதோடு அந்த விமானத்திற்கு பதிலாக மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தகவல் வெளியில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. ஆனாலும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம், இந்த தகவல் டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து டிஜிசிஏ விசாரணை மேற்கொண்டது. விபத்துக்குள்ளான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பறப்பதற்கு தடை விதித்தது. மீண்டும் தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்பு, அந்த விமானத்தை சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் உரசி தீப்பற்றியது: 194 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,IndiGo ,Chennai airport ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...