×

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை இந்தியா 3வது முறையாக சாம்பியன்: பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி, ரசிகர்கள் கொண்டாட்டம்

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா 3வது முறையாக கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டிகளை இந்தாண்டு பாகிஸ்தான் நடத்தியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், தான் போட்டியிட்ட 3 போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் லீக் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசி அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றமின்றி முந்தைய போட்டியில் ஆடிய வீரர்களே இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக வில் யங், ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

8வது ஓவரில் அணியின் ஸ்கோர் 57 ஆக இருந்தபோது, வருண் சக்ரவர்த்தி பந்தில் வில் யங் எல்பிடபிள்யு முறையில், 15 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். சிறிது நேர இடைவெளியில் ரச்சின் ரவீந்திரா, குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டாகி, 37 ரன்னில் நடையை கட்டினார். பின் வந்த அதிரடி வீரர் கேன் வில்லியம்சனும், குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதனால், 75 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து பரிதாப நிலையில் காட்சி அளித்தது. சிறிது நேரத்தில் டாம் லாதம் 14 ரன்னில், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.

அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 108. இருப்பினும், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி விக்கெட்டுகள் சரியாமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 57 ரன் சேர்த்திருந்த நிலையில், வருண் சக்ரவர்த்தி வீசிய மந்திரப் பந்தில் கிளென் பிலிப்ஸ் கிளீன் போல்டாகி 34 ரன்னில் 5வது விக்கெட்டாக வெளியேறினார். 40 ஓவர் முடிவில் நியூசி. 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்திருந்தது. பின், நிதானமாக ஆடிக் கொண்டிருந்த டேரில் மிட்செல் அணியின் ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் அதிரடி காட்டத் துவங்கினார்.

46வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய அவர் ஷமியின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் தந்து 63 ரன்னுக்கு அவுட்டானார். 49வது ஓவரில் மிட்செல் சான்ட்னர் (8 ரன்) ரன் அவுட்டானார். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்தது. மைக்கேல் பிரேஸ்வெல் 53, நாதன் ஸ்மித் 0 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகள், முகம்மது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து, 252 ரன் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

துவக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் ரோகித் சர்மா, நியூசி பந்துகளை ஒருபுறம் துவம்சம் செய்ய, மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக ரன் சேர்க்க, 17 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 100ஐ எட்டியது. அப்போது ரோகித் அரை சதம் கடந்து 68 ரன் எடுத்திருந்தார். சிறிது நேரத்தில் 18.4வது ஓவரில் கில் (31 ரன்), சான்ட்னர் பந்தில் பிலிப்சிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின் வந்த விராட் கோஹ்லி அடுத்த ஓவரில் 1 ரன்னில் அவுட்டாகி பெருத்த ஏமாற்றத்தை தந்தார். 27வது ஓவரில் 76 ரன் (3 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்திருந்த ரோகித் சர்மா, ரவீந்திரா பந்தில் லாதமிடம் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார்.

பின்னர், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்னில் அவுட்டானார். 49 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 34, ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஐசிசி தொடர் இறுதிப் போட்டிகளில் வெல்ல முடியாத அணியாக திகழ்ந்த நியூசிலாந்தை இந்தியா நேற்று வென்று தன் வல்லமையை நிரூபித்துக் காட்டியுள்ளது.

* ஆட்ட நாயகன் ரோகித் சர்மா
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மார்ச் 10: ஐஐசி சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: ஒரு குறைபாடற்ற சாம்பியன், ஒரு சரியான முடிவு. 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி வலுவான போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதற்கு வாழ்த்துகள்.

* என்று தணியுமிந்த டாஸ் வெல்லும் தாகம்…
டாசில் தோற்பதில் அதிரடி காட்டி வரும் இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்காக நேற்று டாஸ் போடப்பட்டபோதும் 15வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2023 நவம்பர் முதல் நேற்றைய ஒரு நாள் போட்டி வரை டாஸ் போடும்போது இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இது 12வது டாஸ் தோல்வி. இதையடுத்து, அதிக முறை டாஸ் தோற்ற கேப்டன் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.

* சாம்பியன்கள் பட்டியல் ஆண்டு சாம்பியன் 2வது இடம்
1998 தெ.ஆப்ரிக்கா வெ. இண்டீஸ்
2000 நியூசிலாந்து இந்தியா
2002 இந்தியா-இலங்கை மழையால் போட்டி கைவிடப்பட்டது
2004 வெ.இண்டீஸ் இங்கிலாந்து
2006 ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ்
2009 ஆஸ்திரேலியா நியூசிலாந்து
2013 இந்தியா இங்கிலாந்து
2017 பாகிஸ்தான் இந்தியா
2025 இந்தியா நியூசிலாந்து

The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை இந்தியா 3வது முறையாக சாம்பியன்: பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி, ரசிகர்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : ICC Champions Cup ,India ,New Zealand ,DUBAI ,ICC CHAMPIONS CUP SERIES ,Dinakaran ,
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...