×

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.74 கோடியில் புதிதாக 114 கோயில் தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அம்பத்தூர்: அம்பத்தூர் பாடியில் உள்ள அருள்மிகு ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் கோயிலில் புதிய தேர் செய்தல் மற்றும் திருக்குள திருப்பணி சீரமைத்தலுக்கான பூமி பூஜை மற்றும் 3 கோடிய 49 லட்சம் ரூபாய் செலவில் கைலாசநாதர் கோயில் புனரமைப்பு பணி துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், அம்பத்தூர் மண்டல குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி, திருவல்லீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வானவில் விஜய், பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், மாமன்ற உறுப் பினர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், டாக்டர் பூர்ணிமா, நாகவல்லி பிரபாகரன், உமா சந்தானம், செயல் அலுவலர்கள் குமரன், சசி குமார் மற்றும் இறையன்பர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியது: இந்து சமய அறநிலைத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நடைபெறாத பக்தர்கள் நலன் சார்ந்த திருப்பணிகள் திமுக அரசுக்கு நிகராக எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை. கைலாசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானதாகும். தற்போது கோயில் கட்டிடம் சிதிலமடைந்து சாலை மட்டத்திற்கு கீழ் இருப்பதால் உயர்த்தி கட்ட பக்கதர்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையேற்று 3.49 கோடி ரூபாய் செலவில் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு எண்ணிக்கை 3000 தாண்டும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோவூரில் 40 ஆண்டு பழமையான கோயில் தேர் புதுப்பிக்கப்பட்டு முடிவுற்று இன்றைக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 114 தேர்கள் 74 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை வீதி உலா வர வைத்தது திமுக அரசுதான். 16 கோடி ரூபாய் செலவில் 64 தேர்கள் மராமத்து பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணி நிறைவுற்றிருக்கின்றன.

தேர்களை பாதுகாக்கின்ற வகையில் மழை, வெயில் காலங்களில் தேர்கள் நனையாமல் இருக்க 26 கோடி ரூபாய் செலவில் 183 கோயில்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 தங்கத்தேர் 31 கோடி ரூபாயில் செலவில் அமைக்கப்பட்டுவருகின்றன. 9 வெள்ளி தேர் 29 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 4 புதிய குளங்கள் 4.20 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 7126 கோடி ரூபாய் மதிப்பிலான 940 கோயில்களின் 7437 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.74 கோடியில் புதிதாக 114 கோயில் தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Minister ,Sekarbabu ,Ambattur ,Arulmigu Jagadambigai Sametha Thiruvalleeswarar temple ,Ambattur Padi ,Thirukula temple ,Kailasanathar temple ,
× RELATED தெற்கு திட்டங்குளத்தில் புதிய...