×

பாஜ கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்புவதா? எடப்பாடி திடீர் பல்டி

சென்னை: அதிமுக மகளிர் அணியின் சார்பில் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதில், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, அங்கு கூடி இருந்த மகளிர்களுக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பெண் ஒருவர் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். பெண் சிசு கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் கொண்டு வந்தார்.

பாஜவுடன் கூட்டணிக்காக அதிமுகவினர் தவம் கிடக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறி உள்ளாரே? எங்கேயாவது அதிமுக என்று குறிப்பிட்டு அவர் (அண்ணாமலை) பேசினாரா? தயவுசெய்து தவறாக பேசாதீர்கள். அதிமுக என்று எங்க, யார் சொன்னது? நீங்கள் (நிருபர்கள்) போட்டு கொடுத்து வாங்காதீங்க. நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். இன்னும் 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெளிவாக கூறி விட்டேன். பத்திரிகைகளிலும் இது செய்தியாக வந்துள்ளது. அதுதான் செய்தி.

இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில மாதங்களாக பாஜவுக்கு எதிராக எடப்பாடி பேசி வந்தார். இப்போது மவுனம் காக்கிறார். குறிப்பாக அண்ணாமலையை எதிர்த்து பேசுவதை தவிக்கிறார். பாஜ கூட்டணிக்காக அதிமுக தவம் கிடைக்கிறது என வெளிப்படையாக அண்ணாமலை பேசியது தெரிந்திருந்தும், அது குறித்து எதுவும் பேசாமல், எடப்பாடி பழனிசாமி, திடீரென பல்டி அடித்து பாஜவுக்கு ஆதரவாக பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* மகளிர் தினத்தையொட்டி எடப்பாடி வாழ்த்து
மகளிர் தினத்தையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர்தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளை புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்.

The post பாஜ கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்புவதா? எடப்பாடி திடீர் பல்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Bahasa alliance ,Chennai ,International Women's Day ,Rayappetta, Chennai ,Adimuka Women's Team ,EDAPPADI PALANISAMI ,Bahaja Alliance ,Edappadi Sudhir Baldi ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...