×

மொழி பிரச்னை சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது’: வேறு மொழிகள் இல்லை என ராஜஸ்தான் ஆளுநர் பேச்சு

ஜெய்ப்பூர்: மொழி பிரச்னை சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது’ என்றும் வேறு மொழிகள் இல்லை என ராஜஸ்தான் ஆளுநர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவு கிசாந்தவு பாக்டே, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘கடந்த 1687ம் ஆண்டு விஞ்ஞானி ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிப்பதற்கு முன்பே, இந்திய பண்டைய நூல்களில் ஈர்ப்பு விசைக் கோட்பாடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த நாடு இந்தியா தான்.

தசம எண் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இந்தியா தான். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, ​​அவர்கள் இந்தியாவின் அறிவை கட்டுப்படுத்த முயன்றனர். இந்தியாவின் திறமையை அறிவியலுடன் இணைக்க வேண்டும். இந்திய மாணவர்களின் அறிவுசார் திறனை மேம்படுத்துவதும், அவர்களை இந்திய பாரம்பரியத்துடன் இணைப்பதும் முக்கியம். மின்சாரம், விமானங்கள் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகள் யாவும், ரிக்வேதம் உள்ளிட்ட பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியர்களின் புலமையை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்தன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் தக்ஷசீலா பல்கலைக்கழகம் பற்றி மாணவர்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு படிக்க வந்தனர்.

அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது. வேறு மொழிகள் எதுவும் இல்லை. அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்துள்ளது. அறிவைப் பெறுவதற்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை. மாணவர்கள் பாடத்திட்டம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நிகழும் புதிய மாற்றங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவுசார் திறனை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்’ என்றார்.

இந்தி மொழி திணிப்பை பல மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில், தமிழ், கன்னடம், மராத்தி, ெதலுங்கு மொழிகள் குறித்து பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்பின் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது என்றும், வேறு மொழிகள் இல்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post மொழி பிரச்னை சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது’: வேறு மொழிகள் இல்லை என ராஜஸ்தான் ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : RAJASTHAN GOVERNOR ,Jaipur ,Rajasthan ,governor ,Haribhavu Kishandavu Bakhte ,
× RELATED மகனுக்கு பதிலாக தந்தைக்கு ஆபரேஷன்: ராஜஸ்தானில்தான் இந்த அவலம்