திருவாரூர் மார்ச் 8: திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நாளை மறுதினம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் நாளை மறுதினம் (10ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 வரையில் நடைபெறவுள்ளது.
இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். எனவே இம்முகாமில் திருவாரூர் மாவட்டதை சேர்ந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (இன்டன்ஷிப்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சிக்கு 21 வயது முதல் 24 வயதுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குடும்பவருமானம் ஆண்டுக்கு ரூ 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல்கூடாது.
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ, பிஏ, பிஎஸ்சி, பிகாம் மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு நேர பணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், ஒன்றிய, மாநில அரசின் கீழ் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது. இப்பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒருமுறை மட்டும் ரு.6 ஆயிரம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 04366-227411 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவாரூர் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.