×

இருமொழி கொள்கையை பின்பற்றி தமிழகம் கல்வியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது

 

நாகப்பட்டினம், மார்ச் 8: தமிழ்நாடு விவசாய சங்கத்தின் அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 3 நாட்கள் நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பான வரவேற்பு குழு அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகப்பட்டினத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையில் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தொடர்வதால் மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசை எதிர்த்து விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழக அரசு யார் எந்த மொழி படிக்க வேண்டும், படிக்க கூடாது என்று எந்த உத்தரவும் போடவில்லை என்பதை பாஜகவை சேர்ந்த அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி கட்டாயம் கிடையாது, அதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல மொழிகள் கற்றுத்தரப்படுகிறது. யாரும் யாருக்கும் மொழியை திணிக்க கூடாது. அண்ணாமலை சொல்கிறார் இருமொழி கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று ஆனால் அண்ணாமலைதான் காலாவதி ஆகிவிட்டார். ஒரு வகுப்பறையில் உள்ள 20 மாணவர்களுக்கும் 20 மொழியை கற்றுத் தர முடியாது. அதற்கான ஆசிரியர்கள் நியமனமும் செய்ய முடியாது. அதனால் தான் இரு மொழி கொள்கையை பின்பற்றி கல்வியில் பல்வேறு சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது. மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் அல்ல என்று பாஜக தலைவர்கள் கூறுவது இந்தியை கட்டாயமாக்குவதற்கு பாஜக கூறும் பசப்பு வார்த்தைகள். மொழி இங்கு பிரச்சனை இல்லை மூன்றாவது மொழி எதற்கு தேவை என்பது தான் இங்கு பிரச்சினை.

அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்து இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு மட்டுமே படித்து ஜனாதிபதியானார். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என கூச்சமில்லாமல் சொல்கிறார் தமிழக ஆளுநர். இந்தி படித்து முடித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு இருமொழி நடைமுறையில் உள்ள தமிழகம் தான் வேலை கொடுக்கிறது. எனவே பாஜக தலைவர்கள் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் நடத்திய அனைத்து கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல. இது தமிழகத்தின் பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.

The post இருமொழி கொள்கையை பின்பற்றி தமிழகம் கல்வியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nagapattinam ,All India Conference ,Tamil ,Nadu Farmers' Association ,Dinakaran ,
× RELATED கடலுக்குள் சென்ற பைபர் படகுகள் கரை...