நாகர்கோவில்: தமிழர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: குமரியில் மலையாளம், தமிழ் இரண்டும் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட தமிழ் மொழி தெரியாத குழந்தைகள் உள்ளனர்.
முதலில் தமிழர்கள் தங்களுக்குள், தங்கள் வீடுகளில் தமிழில் பேச விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஒன்றிய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தவில்லை. பல வகை கல்வி நிதி வந்து கொண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை திட்டத்திற்காக ஒதுக்கிய பணத்தை, அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதால், வழங்கவில்லை. பொதுப்பணித்துறையில் ஒரு பணிக்கு நிதி ஒதுக்கிவிட்டு, அதனை வேறு பணிக்கு பயன்படுத்த முடியுமா? அப்படி பயன்படுத்த அனுமதித்தால் அதனை மேற்பார்வை செய்யும் அமைச்சர் மீது நடவடிக்கை பாயுமே. அதுபோன்றுதான் இதுவும்.
மும்மொழி கொள்கையில் தாய்மொழி தமிழ் கட்டாயம். ஆங்கிலம் தவிர 3வது மொழியாக இந்தி கட்டாயமல்ல. 3வது மொழியாக எந்த இந்திய மற்றும் அந்நிய மொழியை பயிற்றுவிக்கலாம். தமிழனாக தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர எனக்கும் ஆசை உண்டு. அது ஒரு காலத்தில் நடக்கலாம். ஒன்றிய பா.ஜனதா அரசு தமிழ் மொழியை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பெருமை படுத்தி வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழர்களுக்கு தமிழ் தெரியல: பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை appeared first on Dinakaran.