×

அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் மாஜி அமைச்சர்கள் மோதல்: நீ என்ன அதிமுகவின் ஒரிஜினாலிட்டியா?

* காட்டி கொடுத்துவிட்டு ஓடியவன் நீ… தொலைச்சிடுவேன்… தொலைச்சு… மாபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திரபாலாஜி பகிரங்க எச்சரிக்கை

சிவகாசி: ‘நீ என்ன அதிமுகவின் ஒரிஜினாலிட்டியா? தொலைச்சிடுவேன்… தொலைச்சு… என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திரபாலாஜி பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் கடந்த 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சால்வை போடுவதில் ஏற்பட்ட பிரச்னையில், விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஅர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை ராஜேந்திரபாலாஜி அறைந்தார். இச்சம்பவம் மேடையில் இருந்த அதிமுக கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த, இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்த சம்பவம் குறித்து மாபா.பாண்டியராஜன் விளக்கம் அளித்ததும், ராஜேந்திரபாலாஜியை கடுமையாக விமர்சித்தும் மாபா.பாண்டியராஜன் பேசுவதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னன் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: அதிமுகவில் குறுநில மன்னர் தான். என் கூட இருப்பவர்கள் வாள் ஏந்தி வருவார்கள். எங்களை அழிக்க நினைப்பவர்களை பார்த்துக்கொண்டு இருக்க, நாங்கள் கோழைகள் அல்ல. நீ (மாபா பாண்டியராஜன்) ஏன் குறுக்கே வருகிறாய்? போகிற போக்கில் எட்டி தள்ளிவிட்டு சென்றுவிடுவேன்.

அதிமுக தான் என் உயிர். அதிமுக ரத்தம் தான் என் உடலில் ஓடுகிறது. உனக்கு என்ன ரத்தம் ஓடுகிறது? நீ என்ன அண்ணா திமுகவின் ஒரிஜினாலிட்டியா? காங்கிரஸ், தமாகா, பாஜ, தேமுதிக, அதிமுக, ஓபிஎஸ் டீம், பின்னர் திரும்பவும் அதிமுகவில் இருந்தவன் நீ. வெட்கமாக இல்லையா உனக்கு? நீ வந்து என்னிடம் போட்டி போடுகிறாய். நீ யார்? சாதியை சொல்லி என்னை மிரட்ட முடியாது. இந்த இயக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு ஓடியவன் நீ.

நீ எத்தனை கட்சிக்கு போயிட்டு வந்தேனு, இந்த மாவட்டம் முழுவதிலும் தெரியும். என்னை மீறி விருதுநகர் மாவட்டத்தில் உன்னால் என்னடா செய்ய முடியும்? இந்த கட்சியை வளர்க்க நான் என்ன பாடுபட்டு இருக்கேனு, உனக்கு தெரியுமா? நீ பயந்து ஓடிடுவ. எடப்பாடி சொல்றதால வந்தவன், போனவனுக்கு எல்லாம் நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டி இருக்கு. நீ ஜெயலலிதாவை அசிங்கமாக பேசின வீடியோ இன்னும் என்னிடம் இருக்கு. ஆனால் நாங்கள் கட்சிக்காகவும் எடப்பாடிக்காகவும் இந்த கட்சியில் விசுவாசமாக இருக்கிறோம்;

நீ இருப்பியா? உனக்கு என்ன வரலாறு இந்த கட்சியில் இருக்கு?. நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலம் வரை தொடர்ந்து விசுவாசமாக இருந்துட்டு இருக்கிறேன். சால்வையை வாங்கி கொடுத்து ஆள் கூட்டிட்டு வந்தது நான் அல்ல. நீ தான். மாவட்டச் செயலாளராக நான் இருக்கும் போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்த உனக்கு பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன்? நீ செய்வதெல்லாம் வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன கிறுக்கர்களா? தொலைச்சிடுவேன்… தொலைச்சு.

என் மீது சிபிஐ வழக்கு போட்டு இருக்கு. நான் இதற்கு என்றாவது பின்தங்கி இருக்கேனா? எதை பற்றியும் கவலைப்படாமல் கட்சி பணி தான் முக்கியம் என்று இருப்பவன் நான். மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகளின் பெயர்கள் எனக்கு தெரியும், ஒரே ஒரு பெயரை நீ சொல்லு பார்க்கலாம். இந்த மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் என் பின்னால் நிற்கிறார்கள். நல்ல ஆம்பளையா இருந்தா விருதுநகரில் நீ சொல்லி இருக்கணும். மெட்ராஸ்ல போய் எதுக்கு சொல்ற? எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டு யாராவது வாழ்ந்த சரித்திரம் உண்டா? எடப்பாடியாருக்கு மட்டும்தான் நான் கட்டுப்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார். சமீபத்தில் எடப்பாடிக்கு எதிராக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து, மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமித்ஷாவை கோவையில் ரகசியமாக சந்தித்ததால் எடப்பாடி கடுப்பில் உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், பல மாவட்டங்களில் மாஜி அமைச்சர்கள் மோதல் அவ்வப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. தற்போது, மாஜி அமைச்சர்கள் மாபா.பாண்டியராஜனை பகிரங்கமாக ராஜேந்திர பாலாஜி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மாவட்டச் செயலாளராக நான் இருக்கும் போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்த உனக்கு பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன்? நீ செய்வதெல்லாம் வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன கிறுக்கர்களா?

 

The post அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் மாஜி அமைச்சர்கள் மோதல்: நீ என்ன அதிமுகவின் ஒரிஜினாலிட்டியா? appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rajendra Balaji ,Mapa Pandiarajan Sivakasi ,minister ,Mapa Pandiarajan ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...