×

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவில், தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17ம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நாளன்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. பிரசார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டார்.

மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை நீக்க கோரி தயாநிதி மாறன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் எம்.எல்.ரவி, மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை. எனவே, தயாநிதி மாறனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Chennai Central ,Madras High Court ,Chennai ,Chennai Central constituency ,2024 Lok Sabha ,DMK ,Dinakaran ,
× RELATED நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய...