×

இந்தியன் வங்கியில் ரூ.480 கோடி கடன் சரவணா ஸ்டோர்ஸின் 2 கடைகள் ஜப்தி: எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் ரூ.480 கோடியை கட்டாததால், சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உட்பட 2 கடைகளை வங்கி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் வந்து ஜப்தி செய்தனர். பிறகு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு சரவணா ஸ்டோர் குழுமம் இயங்கி வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளின் வளர்ச்சிக்காக இந்தியன் வங்கியில் கடந்த 2017ம் ஆண்டு ரூ.250 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் வாங்கிய சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள், வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசலும் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்தியன் வங்கி சார்பில் கடன் வாங்கிய சரவணா ஸ்டோர் நிர்வாகத்திற்கு பல முறை நேரிலும் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியன் வங்கி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.480 கோடியாக கடன் உயர்ந்துள்ளது. இதையடுத்து ரூ.480 கோடி கடன் கட்ட கோரி இந்தியன் வங்கி சார்பில் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வங்கி சார்பில் வழக்கு தொடர்ந்தும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பான வழக்கு எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம், வங்கியில் கடன் வாங்கிய சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் ஒரு மாதத்தில் வட்டியுடன் கட்ட வேண்டும். இல்லையேன்றால் வங்கியில் வாங்கிய கடனுக்கு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் ஆகிய கடைகள் மற்றும் அதில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.ஆனால் நீதிமன்றம் கொடுத்த ஒரு மாத கெடுவுக்குள் சரவணா ஸ்டோர் நிர்வாகம் இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.480 கோடி கடனை கட்டவில்லை. அதைதொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி அதிகாரிகள் கடன் வாங்கிய சரவணா ஸ்டோருக்கு சொந்தமான பிரைம் சரவணா ஸ்டோர், சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் ஆகிய இரண்டு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் துணிகள், பொருட்களை ஜப்தி செய்ய நேற்று காலை போலீசார் உதவியுடன் வந்தனர். அப்போது 2 சரவணா ஸ்டோர்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் கடையில் இருந்தனர். உடனே வங்கி அதிகாரிகள் எழும்பூர் நீதிமன்றம் அளித்த ஜப்திக்கான உத்தரவை 2 கடைகள் முன்பும் ஒட்டினர். பின்னர் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் போலீசார் உதவியுடன் வங்கி அதிகாரிகள் வெளியே அனுப்பினர். பிறகு 2 கடைகளில் உள்ள பல கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதைத் தொடர்ந்து கடைகளுக்கும் சீல் வைத்தனர்.பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் பொருட்களுடன் சேர்த்து ரூ.480 கோடி கடனுக்கு ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post இந்தியன் வங்கியில் ரூ.480 கோடி கடன் சரவணா ஸ்டோர்ஸின் 2 கடைகள் ஜப்தி: எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Bank ,Saravana Stores ,Jafti ,Elampur ,Chennai ,Saravana Store Gold palace ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி