புதுடெல்லி: தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியை விட ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளை கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 1991ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர். இது 2011ம் ஆண்டில் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் உதாரணத்திற்கு 1991ம் ஆண்டு பீகாரில் 90.2 சதவீதம் பேர் இந்தியை மட்டும் பேசுவதாக இருந்தனர்.
இது 2011ல் 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேச மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மக்களின் மொழி தேர்வுகளை மீண்டும் ஆய்வு செய்ததில், இந்தி பேசாத மாநிலங்கள் 2வது மொழியாக ஆங்கிலத்தை ஏற்று கொண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழுடன், ஆங்கிலமும் தெரிந்தவர்களின் விகிதம் 1991ல் 13.5 சதவீதமாகவும், 2011ல் இது 18.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியாது: தாய் மொழியுடன் ஆங்கிலம் பயின்றவர்கள் வாழ்க்கை தரம் உயர்வு, ஆய்வில் திடுக் தகவல் appeared first on Dinakaran.
