×

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் மசாலா வடை வழங்கும் திட்டம் தொடங்கியது: பக்தர்கள் வரவேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு நித்ய அன்னபிரசாத திட்டத்தை அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். தற்போது நாளொன்றுக்கு ரூ.44 லட்சம் செலவில் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. காலையில் பொங்கல், இட்லி, சட்னி, சாம்பாரும், மதியம் சாதம், சாம்பார், ரசம், மோர், சர்க்கரை பொங்கல், பொறியல், சட்னி ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அன்னதான சத்திரத்தில் பக்தர்களுக்கு வெங்காயம் இல்லாத மசாலா வடை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த மாதம் நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அந்த திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சுடச்சுட பரிமாறப்பட்ட மசாலா வடைகளை சாப்பிட்ட பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

* 35 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்படுகிறது
செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நிருபர்களிடம் கூறியதாவது: உலகின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு கடந்த காலத்தில் வருகை தந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது தரமான மூலப்பொருட்கள் வாங்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு மதிய உணவில் 35 ஆயிரம் வடைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் மசாலா வடை வழங்கும் திட்டம் தொடங்கியது: பக்தர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumalayan Temple Annabrasad ,Thirumalai ,Chief Minister ,N. D. Ramarao ,Tirupathi Yumamalaiaan Temple Annaprasadam ,
× RELATED வேற்று மதத்தை சேர்ந்த திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் இடமாற்றம்