
கோவை: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தீத்திபாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை புகுந்தது. குப்பனூர் பகுதியில் விவசாயி பிரேம்குமார் பயிரிட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட வாழை பயிர்களை துவம்சம் செய்தது. அதன்பிறகு, தீத்திபாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட வாழை பயிர்களை சேதப்படுத்தியது. ஆனாலும், தனக்கு போதுமான தீவனங்கள் கிடைக்காததால் கோபம் அடைந்து அங்கிருந்த காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது. இதன்பின்னர், வாழை காட்டிற்குள் புகுந்து, வெளியேற மறுத்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு யானையை அங்கிருந்து வெளியேற்றினர். ஆனாலும், எதற்கும் பயப்படாமல் அந்த ஒற்றை யானை நீண்ட நேரம் போக்கு காட்டியது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த ஒற்றை யானையின் அட்டகாசத்தால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெருத்த நஷ்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கூறுகையில்,“எங்கள் பகுதியில் காட்டு யானை ஊடுருவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேளாண் பயிர்களுக்கு பெரும் சேதத்தை உண்டாக்கி வருகிறது. விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகிறார்கள். எனவே, கூடுதல் வன ஊழியர்களை நியமித்து யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இவை, ஊருக்குள் புகுவதற்கு முன்பாகவே வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், விளைபயிர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
The post தீத்திபாளையம் கிராமத்தில் வாழை பயிர்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை; வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது: விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.
