பரம்பொருள் ‘‘ஸர்வபூதாந்தராத்மா”, அதாவது ‘எல்லா ஜீவன்களிலும் ஸர்வாந்தர்யாமியாக உள்ள ஆத்மா’, என்பதை உணர வேண்டும். ‘தானே எல்லா ஜீவன்களுடைய அந்தர்யாமி’ என்று பாபா கூறியுள்ளார். தமது சிறந்த சீடர்கள் யாவருக்கும் இந்த அந்தர்யாமி தத்துவத்தை மிக எளிதாக விளக்கியுள்ளார். பாபாவுடன் அவர்கள் கொண்ட பந்தங்கள், பூர்வ ஜென்மங்களின் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்திலும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆதரவையும் உதவிகளையும் அளித்து வருவதாக அடிக்கடி குறிப்பிடுவார். இந்த உறவு, பந்தங்கள் ‘ருணானுபந்தம்’ என்று கூறப்படுகிறது. ஒரு குருவின் கீழ் சீடராக இருப்பதே சக்தி வாய்ந்த ருணானுபந்தம் அல்லது குரு பந்துத்வம் எனப்படும்.
‘‘அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸ லக்ஷ்மணம்
ந து ப்ரதிக்ஞாம் ஸம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விஸேஷேத: ’’
‘நான் ஒரு வாக்குறுதி அளித்து விட்டால் அதை எந்நாளும் காப்பேன். என் உயிரையோ, உன்னையோ, லட்சுமணனையோ கூட விட்டுவிடுவேன். ஆனால் நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் கைவிட மாட்டேன்’ என்பது இராமன் சீதையிடம் சொல்லும் உயர்ந்த வாசகம். அதைப் போலவே, பாபாவும் ஒரு வாக்கு அளித்தால் அதை எப்போதும் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் பின்தொடர்ந்து அதனைக் காப்பார். வேதங்களில் கூட ஒருவன் எவ்வளவுதான் கற்றுணர்ந்து தேறியிருப்பனும் பிரம்மத்தை அறிந்தவன் முன் உண்மையிலேயே மங்கிவிடுகிறான். சப்த பிரம்மத்தின் ஒளி, பரபிரம்மத்தின் பேரொளியின் முன் மங்கிவிடும்.
திருமதி.கபர்தே பாபாவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும் அத்யந்த பிரேமையும் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நாளும் தான் சமைத்த நைவேத்தியத்தை பாபாவிற்கு கொடுத்து, பாபா அதனை ஏற்றுக் கொண்ட பின்பு தான் தாம் சாப்பிடுவதற்குச் செல்வார். தான் சீரடியில் இருக்கும் வரை இதை ஒரு நியமமாகவே செய்து வந்தார். ஒருநாள் அவரின் உறுதியான பக்திக்கு அருள் செய்ய விரும்பினார் பாபா. திருமதி. கபர்தே அன்று பலவித நைவேத்தியங்கள் செய்து பாபாவிற்குக் கொண்டு வந்தார்.
அவைகள் வந்தவுடனே பாபா தம் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, கஃப்னியின் கைகளை மடித்து விட்டுக் கொண்டு ஆர்வத்துடன் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டார். அந்த நைவேத்தியங்களை ஆர்வமுடன் உண்ணத் தொடங்கினார்.‘எத்தனையோ நைவேத்தியங்கள் தினமும் வருகின்றன. அவையெல்லாம் சில நேரம் பாபாவின் கவனிப்பின்றி நெடுநேரம் கிடக்கும். ஆனால் திருமதி. கபர்தேயின் நைவேத்தியம் வந்தவுடன் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? பாபா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்?’. இதனை அணுக்கத் தொண்டரான ஷாமா பார்த்து விட்டு, ‘இந்தப் பெண்மணியின் நைவேத்தியம் வந்தவுடன் நீங்கள் உற்சாகமாக சாப்பிடத் தொடங்குகிறீர்கள். இது என்ன விநோதம்’ என்று கேட்டார். ஷாமாவிடம் பாபா, ” எனக்குத் தெரியும்; உனக்குத் தெரியாது.’’ என்றார்.
‘‘ஆமாம், இந்த நைவேத்தியம் அசாதாரணமானதுதான். முந்தைய பிறவியில் இவள் ஒரு பசுவாக இருந்தாள். அதற்கு அடுத்த பிறவியில் ஒரு தோட்டக்காரன் குடும்பத்திலும், அதன் பின்னர் வைசிய குடும்பத்திலும் பிறந்து, இந்தப் பிறவியில் இந்த உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறாள். நீண்ட காலத்திற்குப் பின்பு இந்தப் பிறவியில் இப்பொழுது தான் இவளைப் பார்க்கிறேன். அன்புடனும் பிரேமையுடனும் கொடுக்கப்பட்ட இந்த நைவேத்தியத்தில் இரண்டு கவளங்களையாவது என்னைச் சாப்பிட விடு ஷாமா,’’ என்று சொல்லிக் கொண்டே சாப்பிடத் தொடங்கினார். வயிறு நிரம்ப சாப்பிட்ட பின் அதன் அடையாளமாக ஏப்பம் விட்டு தம்முடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்.
திருமதி. கபர்தே பாபாவின் கால்களைப் பிடித்து விடத் தொடங்கினார். அப்போது பாபா திருமதி. கபர்தேயிடம், ‘ராஜாராமா, ராஜாராமா’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிரு. வாழ்வின் நோக்கத்தை எய்துவாய் என்று கூறினார். இந்த உபதேசம் ‘சக்திபாதம்’ என்றழைக்கப்படும் குருவின் சக்தியை சீடனுக்குக் கொடுப்பதாகும். இந்நிகழ்ச்சி பக்தன் தான் குருவோடு ஒன்றியவன் என்ற பாவனையையும், குருவும் பக்தன் தன்னோடு ஒன்றியவன் என்ற பாவனையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.அடுத்து வரும் கதை ஒவ்வொரு பிறவியிலும் குருவானவரின் கருணை நம்மை எவ்வாறு கர்மங்களிலிருந்து மீட்டெடுக்கிறது என்பதை விளக்கும்.
முன்னொரு நாளில் பாபா நதிக் கரையில் உலவிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வழிப்போக்கன் ஒருவன் அவரை தம் வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றான். பாபா புகை பிடிப்பதற்கு சில்லிம் தயார் செய்து கொண்டிருந்த போது ஒரு தவளை ஓலமிடுவதைக் கேட்டு அவ்வழிப் போக்கன் என்னவென்று அறிந்து கொள்ள விரும்பினான்.அதற்கு பாபா, ‘முந்தைய பிறவிகளில் நாம் விதைத்த பழத்தின் பலனை நாமே அறுவடை செய்ய வேண்டும். அதைப்பற்றிக் கதறுவதால் பலன் ஒன்றுமில்லை’ என்றார். வழிப்போக்கன் வெளியே சென்று பார்த்த போது ஒரு கருநாகம், பெரிய தவளையைத் தன் வாயில் கவ்விக்கொண்டிருப்பதைக் கண்டான். பாபாவிடம் திரும்பி வந்து இன்னும் சற்று நேரத்தில் ‘தவளையைப் பாம்பு தின்று விடும்’ என்று கூறினான். பாபா, ‘இல்லை. நான் தான் அதன் பாதுகாவலன். அதனை நான் விடுவிப்பேன். எனக்குத் தெரியும்’ என்றார்.
வழிப்போக்கன் அந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டாம். அந்தப் பாம்பு நம்மைத் தாக்கலாம் என்றான். ஆனால் பாபா அவ்விடத்திற்குச் சென்று, ‘ஓ! வீரபத்ரப்பா, உன் பகைவனான சென்னபஸவப்பா தவளையாகப் பிறந்த போதிலும், இன்னும் பழைய கசப்பான பகைமையை வைத்திருக்கிறாயே? சீ! கேவலம் வெட்கப்படு, உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு’ என்றார். இவ்வார்த்தைகளை கேட்டவுடனே பாம்பு தவளையை விட்டு உடனே விலகி ஆற்றில் குதித்து மறைந்து விட்டது. தவளையும் தன் உயிரை பிடித்துக் கொண்டு தப்பியோடி புதருக்குள் மறைந்தது.
வழிப் போக்கனுக்கு மிகவும் ஆச்சரியம். யார் அந்த வீரபத்ரப்பா? யார் சென்னபஸவப்பா? என்று கேட்டான். ஆம், ‘‘எனக்குத் தெரியும்; உனக்குத் தெரியாது” என்றார் பாபாவீரபத்ரப்பா ஒரு பிறவியில் கஞ்சத் தனம் கொண்ட பணக்காரனாக இருந்தான். பணக்காரனாக இருந்ததால் அவனிருந்த ஊரிலுள்ள மஹாதேவர் கோயிலின் பராமரிப்பு வேலைகளுக்காக ஊர் முழுவதும் வசூலிக்கப்பட்ட ஒரு பெருந்தொகை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவன் அந்தத் தொகையை முழுவதும் தமக்காகச் செல வழித்து விட்டு ஏப்பம் விட்டான். ஊர்க்காரர்கள் வந்து கேட்ட போது அவர்களிடம் இனிமையாகப் பேசி இன்னும் கொஞ்சம் தொகை வேண்டுமென்று கேட்டான்.
அந்தத் தொகையையும் அவர்கள் சேகரித்து அவனிடம் கொடுக்க அதையும் அவனே செலவழித்து விட்டான். சில நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனைவியின் கனவில் மஹாதேவர் தோன்றி, ‘எழுந்திரு. கோயில் கோபுரத்தை நீயே கட்டு. நீ செலவு செய்வதைப் போல நான் உனக்கு நூறு மடங்கு திருப்பித் தருகிறேன்’ என்று கூறினார். அந்தக் கனவை அவனிடம் சொல்ல அது நம்மைப் பிரித்து வைக்கும் கெட்ட கனவு என்று கூறினான். மீண்டும் மஹாதேவர் அவன் மனைவியின் கனவில் தோன்றி, ‘உன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்பணியைச் செய்’ என்று கூறினார்.
இம்முறை அவள் தம் தந்தையால் கொடுக்கப்பட்ட நகைகளைத் தருகிறேன் என்று அவனிடம் கூறினாள். அப்பொழுதும் அந்தக் கஞ்சன் அவளையும் கடவுளையும் ஏமாற்றத் தீர்மானித்தான். அந்த நகைகளை குறைத்து மதிப்பிட்டு, அதற்கு ஈடாக ஒரு ஏழைப் பெண்மணி தம்மிடம் அடமானம் வைத்திருந்த நிலத்தை கடவுளுக்குக் கொடுக்க தீர்மானித்தான். ஆனால், அந்த நிலம் தரிசு; ஒன்றுக்கும் உதவாது என்று அவனுக்குத் தெரியும். சில நாள்களுக்குப் பிறகு விநோதமான நிகழ்ச்சிகள் நடந்தன. கடுமையான புயலில் அந்தக் கஞ்சன் வீட்டில் இடி விழுந்து அவனும், அவன் மனைவியும் இறந்தனர். டுபகி என்ற அந்த ஏழைப் பெண்மணியின் பிறப்பும் முடிந்தது.
பின் அந்தக் கஞ்சன் வீரபத்ரப்பா என்ற பெயருடன் பிறந்தான். அவன் மனைவி கௌரி என்ற பெயருடன் கோயில் பூசாரியின் மகளாய்ப் பிறந்தாள். டுபகி அந்தக் கோயிலில் பணி செய்பவர் மகனாக, சென்னபஸவப்பா என்ற பெயரில் ஆணாகப் பிறந்தாள். அந்த பூசாரி எனது நண்பன். அவன் கௌரிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தான். வீரபத்ரப்பாவே இந்தப் பிறப்பிலும் கௌரியை திருமணம் செய்து கொண்டான். இப்பொழுதும் அவன் பணத்தாசை பிடித்தவனாகவே பிறந்தான். போன பிறப்பில் வீரபத்ரப்பா கொடுத்த நிலம் பூசாரியிடமிருந்து இப்பொழுது கௌரி கைக்கு வந்து சேர்ந்தது. அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்து இருந்தது.
அதை விற்று பணமும் வந்தது. எனவே, வீரபத்ரப்பா அந்தப் பணம் தனக்கு வேண்டுமென்று அடம்பிடித்தான். நான் கௌரியே அதன் உரிமைக்குரியவள் என்று சொன்னேன். வீரபத்ரப்பா என் மீது கோபமடைந்தான். இப்பிறப்பிலும் மஹாதேவர் கௌரியின் கனவில் தோன்றி ‘‘பணத்தை யாரிடமும் கொடுக்காதே. கோயில் திருப்பணிக்காக சென்னபஸவப்பாவிடம் கலந்து ஆலோசித்து கொஞ்ச பணத்தைக் கொடு. எதற்கும் மசூதியில் உள்ள பாபாவிடம் கேட்டுக் கொள்” என்று கூறினார். கௌரி என்னிடம் அந்தக் கனவைக் கூறினாள். அதனால், ‘முழுப்பணமும் அவளுக்கே சொந்தம்; கொஞ்ச பணத்தை கோயிலுக்காக சென்ன பஸவப்பாவிடம் கொடுக்கலாம்’ என்று கூறினேன்.
இதனால் வீரபத்ரப்பாவுக்கும் சென்னபஸவப்பாவிற்கும் சண்டை மூண்டது. அப்போது வீரபத்ரப்பா மூர்க்கமாகி சென்னபஸவப்பாவை தாக்க முற்பட்டான். நான் சென்னபஸவப்பாவைக் காப்பாற்றினேன். அதன்பின், வீரபத்ரப்பாவை நாகமாகவும், சென்னபஸவப்பாவை தவளையாகவும் இந்தப் பிறப்பில் தான் பார்க்கிறேன். போனபிறப்பில் கொடுத்த வாக்குறுதியை இப்பிறப்பிலும் காப்பாற்றினேன். இவையெல்லாம் கடவுளின் லீலைகள்; அவரின் திருவிளையாடல்கள்.
ஒருவன் விதைப்பதை அவனே அறுவடை செய்து தீர வேண்டும். மற்றவர் களிடம் பட்ட பழைய கடனையும், விவகாரங்களையும் கஷ்டத்துடன் அனுபவித்துத் தீர்த்தால் அன்றி வேறு விமோசனம் கிடையாது. பணத்தின் மீதுள்ள பேராசையானது அவனை கீழான நிலைக்கு இழுத்துச் செல்லும். முந்தைய கர்மாக்களை அனுபவிக்கும் போது அந்தக் கர்மாக்களின் தீவினை
களைப் பொறுத்துக் கொண்டு அதனைக் கடப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கு கடவுளின், குருவின் அருளை வேண்டிப் பெற வேண்டும். ‘‘Guru is the mighty Hero Who has broken the unbroken chain of karma”.
ஒருநாள் மசூதியில் பாபாவும் பக்தர்களும் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பல்லி, ‘‘டிக்… டிக்’’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தது. அப்போது ஒரு பக்தர் இதனால் ஏதேனும் நல்ல சகுனமா அல்லது தீய சகுனமா என்று பாபாவிடம் கேட்டார். அதற்கு பாபா அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஔரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதால் அப்பல்லி மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். சிறிது நேரம் கழித்து ஔரங்காபாத்திலிருந்து குதிரையில் பெருந்தகை ஒருவர் பாபாவை பார்க்க வந்தார். அப்பொழுது நீண்ட பயணத்தால் களைப்பாக இருந்த குதிரைக்கு கொள்ளு கொடுக்க நினைத்து, கொள்ளு வைத்திருந்த சாக்குப்பையை எடுத்தார். அந்தச் சாக்குப் பையிலிருந்து பல்லி ஒன்று கீழே விழுந்தது.
எல்லோரும் பார்க்க அந்த பல்லி சுவரில் ஏறியது. கேள்வி கேட்ட பக்தரை பாபா அந்தப் பல்லியை நன்றாகப் பார்க்கும்படி சொன்னார். அந்தப் பல்லி சுவரில் ஏறி, ஏற்கனவே சப்தம் செய்து கொண்டிருந்த பல்லிக்கு அருகில் சென்று முத்தமிட்டது. பின் இரண்டும் குதித்து குதித்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தன. சீரடி எங்கே இருக்கிறது? ஔரங்காபாத் எங்கே இருக்கிறது? ஔரங்காபாத்திலிருந்து வந்த மனிதர் பாபாவை ஏன் பார்க்க வரவேண்டும்? இரண்டு சகோதரிப் பல்லிகள் எப்படி சந்தித்தன? அதனை எப்படி பாபா சொன்னார்? எல்லாமே லீலைகள்தான். ஆச்சரியம் தான். பாபாவின் திருவார்த்தைகளில் சொன்னால் ‘‘எனக்குத் தெரியும்; உனக்குத் தெரியாது” என்பதுதான்.
‘‘என்னிடம் ஒப்புவிக்கப்பட்ட ஒவ்வொரு தம்பிடிக்கும் நான் கணக்கு வைத்திருப்பேன். எவரையும் நடுவழியில் விட்டுவிட மாட்டேன்” என்று பாபா அடிக்கடி கூறுவார். அந்த திருவார்த்தைகளின் பொருளை அவரையன்றி வேறு யார் விளக்கிக் கூற முடியும்? சாயி சரணம்.குறிப்பு: நன்றி. ஓவியர் அழகு பொன் பசுபதி நாதன். (தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலின் வெளியீடான ஸ்ரீ சாயி சித்திர சரிதம்)
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post எனக்குத் தெரியும் உனக்குத் தெரியாது appeared first on Dinakaran.