×

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்: ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம், மார்ச் 6: காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து வீணாகி வருவதால் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசுக்கு வருவாய் ஈட்டலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் மற்றும் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்கள் என அனைத்தும் காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் பகுதியில் தாலுகா காவல் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் மணல் கடத்தல் மாட்டு வண்டிகள், கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டர்கள், லாரிகள், ஆட்டோக்கள் என போலீசார் பறிமுதல் செய்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பறிமுதல் செய்த வகையில், இருசக்கர வாகனங்கள், கார், வேன், மாட்டு வண்டிகள் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் காவல் நிலையம் அருகில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இவை, பாதுகாப்பு இல்லாமல், திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மேலும், இந்த வாகனங்களை சுற்றிலும், முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறையாக பராமரித்து, வழக்குகள் முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வாகனங்களை உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்காமல், குப்பை போல் குவித்து வைத்துள்ளனர்.

இதனால், லட்சக்கணக்கான மதிப்பு வாகனங்கள் மக்கி, மண்ணோடு மண்ணாகி வீணாகி வருகின்றன.இங்கு புதியவை, பழையவை என, ஆயிரக்கணக்கான பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வீணாகி கிடக்கின்றன. இங்கு ஒரு சிலர், புதிய வாகனங்களின் டயர், சக்கரங்கள், இன்ஜின் போன்றவற்றை சமூக விரோதிகள் ஆதரவுடன் திருடி விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இவற்றை யாரும் கண்காணிப்பது இல்லை என்பதால், வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடு போகின்றன. எனவே, காவல் துறையினர் பறிமுதல் செய்த வாகனங்களையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என, வாகன உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் வழக்குகளை விரைவாக முடித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டலாம் என, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

The post காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்: ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Taluka Police Station ,Kanchipuram ,Kanchipuram… ,Dinakaran ,
× RELATED நாளை குடும்ப அட்டைதாரர் குறைதீர் முகாம்கள்