திருவனந்தபுரம்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கூரியர் மூலம் கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில், அந்த பார்சலை வாங்க வந்த வாலிபரை திருச்சூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கேரளாவில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் கடத்தல் குறையவில்லை. இந்த நிலையில் திருச்சூர் அருகே பாவரட்டி பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு சந்தேகமுள்ள பார்சலை வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார்.
இதைக்கண்டதும் தயாராக இருந்த போலீசார் உடனே அருகில் சென்று வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அந்த பார்சல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கம்ப்யூட்டர் யூபிஎஸ் இருந்தது . போலீசார் அந்த கம்ப்யூட்டர் பாகத்தை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 87 கிராம் ‘சரஸ்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த போதைப்பொருளை கைப்பற்றிய போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர் திருச்சூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியைச் சேர்ந்த சரபுதீன் (26) என தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை போலீசார் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு போதைப்பொருள் அனுப்பியது யார்? போதைப்பொருள் கும்பலுடன் சரபுதீனுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பஞ்சாபில் இருந்து கேரளாவுக்கு கூரியரில் போதை பொருள் கடத்தல்: பார்சலை வாங்க வந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.