- மகன் ராம்குமார்
- திலகம் சிவாஜி கணேசன்
- சென்னை
- சிவாஜி கணேசன்
- ராம்குமார்
- திலகம் சிவாஜி கணேசன்
- உயர் நீதிமன்றம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்துவதற்காக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததையடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யாததால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராம்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் உள்ளது. ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எப்படி ஜப்தி செய்ய முடியும். ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளித்தார். மேலும், செய்திகளின் மூலம் தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு என்று தெரிந்து கொண்டதாக தெரிவித்த நீதிபதி, பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்குமாறு இரு தரப்புக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி மகன் ராம்குமார் முறையீடு: மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.