- குங்குமம்
- டோஜி
- நாட்டிய ஆச்சார்யா
- டாக்டர்
- ஜெயந்தி யோகராஜா
- இலங்கை
- இந்தியா
- இங்கிலாந்து
- சாஸ்வதம்
- ஐரோப்பா
- அமெரிக்கா
- கனடா
- ஆஸ்திரேலியா
- இந்தியா...
நன்றி குங்குமம் தோழி
இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார் நாட்டிய ஆச்சார்யா முனைவர் ஜெயந்தி யோகராஜா. இவர் சாஸ்வதம் என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நடனக்கலைஞர், நடன அமைப்பாளர், எழுத்தாளர், கல்லூரி விரிவுரையாளர், சமூக சேவகர் என பல்வேறு முகங்களை கொண்டவர் முனைவர் ஜெயந்தி யோகராஜா. சென்னை கலாஷேத்ராவின் மாணவியான இவர் ஐம்பதாண்டு காலமாக பரதக்கலையை தனது வாழ்வின் உயிராக நினைத்து வாழ்ந்து வருகிறார். லண்டன் மாநகரில் சலங்கை நர்த்தனாலயா அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ் என்ற நாட்டிய பயிற்சி மையத்தினை நடத்தி வரும் இவர், தான் நடத்தும் சாஸ்வதம் அமைப்பின் சேவை மற்றும் நடனப் பணிகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
‘‘லண்டனில் 2019ம் ஆண்டுதான் சாஸ்வதம் அமைப்பினை துவங்கினேன். என்னுடன் இணைந்து பவித்ரா சிவயோகம் என்பவரும் இந்த அமைப்பினை நிர்வகித்து வருகிறார். அவர் லண்டனில் தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார். எங்களின் அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக மற்றும் நடன சேவைகளை செய்து வருகிறோம். அதில் பரதக்கலையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.
அவை தவிர உணவு, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம். இதற்காக யாரிடமும் நாங்க நன்கொடை பெறுவதில்லை. எங்களின் சொந்த உழைப்பில் தான் இந்த அமைப்பினை நாங்க நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் கடந்த வருடம் மற்றொரு தொண்டு நிறுவனத்திற்கு எங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கினோம். மேலும் பல எதிர்கால திட்டங்கள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு உதவிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றவர் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் குறித்து விவரித்தார்.
‘‘பரதம் மிகவும் தொன்மை மற்றும் பாரம்பரியமான நடனக் கலை. இந்தக் கலையினை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த நோக்கத்துடன்தான் இதனை துவங்கினோம். லாப நோக்கமற்ற அமைப்பு என்பதால், அதன் மூலம் உணவு, உடை, கல்வி, நடனம் என அனைத்து உதவிகளையும் தேவைப்படுவோருக்கு செய்து வருகிறோம். உலகமெங்கும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி அதன் மூலம் வரும் வருவாயினைக் கொண்டுதான் நாங்க மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். மேலும் வசதியற்ற மாணவ, மாணவியர்கள் நாட்டியம் கற்றுக் கொள்ளவும் அதனை அரங்கேற்றம் செய்ய தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
இங்கிலாந்து மட்டுமின்றி கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். உலகெங்கும் பல்வேறு
நடனத் திறமை உள்ளவர்களை கண்டறிந்து அவர்களது உன்னத திறமைகளை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறோம். சென்னையில் இந்தாண்டு குடியரசு தினத்தன்று அமைப்பின் சார்பாக மாபெரும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், நடன வல்லுனர்கள், நடனம் பயின்ற மாணவிகள் என பலரும் பங்கு பெற்றார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 27 நடன மையங்களிலிருந்து நடனக் கலைஞர்கள், 150க்கும் மேற்பட்ட வளரும் கலைஞர்களும் நடனமாடி அசத்தினார்கள். இந்த ஒரு நாளுக்காக நாங்க அனைவரும் பல மாதங்களாக கடுமையாக உழைத்தோம்.
அதற்கு பலனாக இந்த நடன நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அமைப்பின் துணை இயக்குனர் பவித்ரா சிவயோகம், உறுப்பினர்களான ரூபேஷ் மற்றும் சாஸ்கியா கிஷன். மேலும் இதில் நடன நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சாதனையாளர்களை கண்டறிந்து விருது வழங்கி கௌரவித்தோம்’’ என்றவர் அமைப்பின் அடுத்தக்கட்ட திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
‘‘சென்னையில் நடந்தது போல உலகெங்கும் கலை நிகழ்ச்சிகளை தொடர இருக்கிறோம். அதில் அடுத்தக்கட்டமாக யாழ்ப்பாணத்தில் இலவச நடன அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அதில் திறமையான மாணவிகளுக்கு அமைப்பு சார்பாக அரங்கேற்றம் செய்து வைக்க உள்ளோம். திறமை உள்ள நடனக் கலைஞர்களுக்கு மேடை அமைத்து தருவதே எங்களது பணி. நடனமும் சேவைகளும் எங்களது இரு கண்கள்’’ என்றார் ஜெயந்தி யோகராஜா.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post உன்னத திறமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்! appeared first on Dinakaran.