×

இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது

சென்னை: இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து, தங்களுக்குப் பிடித்த காரியங்களை தவிர்த்து இயேசுவை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் ஆகியவற்றில் அலங்காரங்களைத் தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மிக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள். தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்’ நாளை பின்பற்றி வருகிறார்கள்.

குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினாலான சிலுவைகளை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும் வழக்கத்தின்படி இன்று காலை அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அப்போது பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான் என்பதன் அடையாளமாக சாம்பல் பூசப்பட்டது. தவக்காலமான இந்த 40 நாட்களில், தான தர்மம் செய்ய, இறை வேண்டலில் ஈடுபட, நோன்பிருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த 40 நாட்களில் முடிந்தவர்கள் ஒரு வேலை நோன்பு இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ஏழைகளுக்கு உதவ அழைக்கப்படுகின்றனர். முடியாதவர்கள் சாம்பல் புதன், புனித வெள்ளி அன்று அசைவ உணவு தவிர்த்து, ஒருவேளை நோன்பு இருக்கவேண்டும்.

கிறிஸ்துவத்தில் 40 என்பது மிக முக்கியமான எண்ணாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்களைத் தாங்களே அன்பு செய்ய, தங்களை நேசிப்பது போல பிறரை நேசிப்பது எப்படி என்று உணர்ந்துகொள்ள இந்த 40 நாட்கள் தவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, இந்த நாட்களில் அடுத்தவர் மீது உள்ள அன்பை தர்மம் செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். கடவுளின் அன்பைப் பெற இறை வேண்டல் செய்ய வேண்டும். நம் உடலை அன்பு செய்ய நோன்பிருக்க வேண்டும். சாம்பல் புதனை முன்னிட்டு, சென்னையில் தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை இன்று மாலை நடைபெறுகிறது. தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள். தவக்காலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.

ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13ம்தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும். அதன்படி ஏப்ரல் 18ம்தேதி பெரிய வெள்ளி, 20ம்தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

The post இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : period ,Lent ,Christians ,Jesus ,Chennai ,Ash Wednesday ,Christian ,Tamil Nadu ,
× RELATED ஈஸ்டர் திருவிழாவின் முன்னோட்டமாக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நடக்கிறது