×

கவிஞர் நந்தலாலா மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: கவிஞர் நந்தலாலா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா (69) மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு, ‘திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு’ நூலே சான்றாகும்.அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் மீது பெரும் பற்றும், அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா.

தலைவர் கலைஞர் குறித்து, “தாம் வாழ்ந்த காலம் முழுதும், மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்” என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்தி பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post கவிஞர் நந்தலாலா மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nandalala ,Chennai ,M.K. Stalin ,vice-president ,Tamil Nadu Progressive Writers' Artists Association ,Tamil Nadu Iyal ,Isai Natak Mandram ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...