×

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? நாங்க எப்போ சொன்னோம்: எடப்பாடி கேள்வி; பாஜவுடன் கூட்டணியா? டென்ஷனான பதில்

ஆத்தூர்: தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? நாங்க எப்போ சொன்னோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக மக்களுக்கான கட்சி. இதை முடக்கவும், உடைக்கவும் பலர் முயன்றும் முடியவில்லை. அதிமுகவுக்கு என்று தனித்தலைமை கிடையாது. அனைவருமே பொறுப்பாளர்கள் தான். இது உங்கள் சொத்து. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

உங்கள் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறதே?
இந்த கூட்டணி, கீட்டணி என்றெல்லாம் நீங்கள் கேள்வியை கேட்க வேண்டாம். ராஜ்யசபா சீட்டு குறித்து நாங்கள் ஏதாவது சொன்னோமா? அல்லது தேர்தல் அறிக்ைகயில் வெளியிட்டோமா?. யார் யாரோ சொல்றதை வைத்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
அதிமுகவுக்கு எதிரான ஒரே கட்சி திமுக தான். திமுகவை எதிர்ப்பது மட்டும் தான், எங்களது ஒரே குறிக்கோள். அதற்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காக, இதர கட்சிகள் அனைத்துடனும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.
அப்படியானால் பாஜகவுடனும் கூட்டணிக்கு தயாரா?
இந்த பாஜக, கீஜாகாவெல்லாம் இன்னும் 6மாசம் கழிச்சு கேளுங்கள். மறைத்து வைத்து கூட்டணி செய்ய மாட்டோம். அவர்களுடன் கூட்டணி என்றால், வெட்டவெளிச்சமாகவே முடிவு செய்து அறிவிப்போம். இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், இதையெல்லாம் போட்டு குழப்பி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

* சீமானுக்கு ஆதரவு
சீமான்-நடிகை விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு எடப்பாடி, ‘‘இது ஒரு மனிதரின் தனிப்பட்ட பிரச்னை. இது குறித்து பொதுவெளியில் கேள்வி கேட்டு, அவரை அசிங்கப்படுத்தக்கூடாது. நானும் ஒரு அரசியல் கட்சி தலைவர். அவரும் ஒரு அரசியல் கட்சி தலைவர். எனவே, ஒரு அரசியல் கட்சி தலைவரை அசிங்கப்படுத்தக்கூடாது. மக்கள் பிரச்னைகள் ஏராளமாக உள்ளது. ஊடகங்களும் அது குறித்து கேள்வி கேட்கவேண்டும். எப்போதும் சீமானை பற்றியே கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தக்கூடாது’ என்றார்.

* தேமுதிக பதிலடி கூட்டணியில் விரிசல்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. சமீபத்தில் பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி எடப்பாடியிடம் கேட்டதற்கு, ‘நாங்கள் எப்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று சொன்னோம்’ என்று கூறி, கைவிரித்து விட்டார். இந்த செய்தி வெளியானதும் தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் தளத்தில் ‘சத்தியமே வெல்லும்’, ‘நாளை நமதே’ என்று பதிலடியாக பதிவிடப்பட்டது. மேலும், டிஎம்டிகே ஃபார் டிஎன் (DMDKforTN) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி கூறி வந்தார். இந்த நிலையில் எடப்பாடியின் பேட்டியால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டா? நாங்க எப்போ சொன்னோம்: எடப்பாடி கேள்வி; பாஜவுடன் கூட்டணியா? டென்ஷனான பதில் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,DMDK ,Edappadi ,BJP ,Athur ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Athur, Salem district ,Dinakaran ,
× RELATED அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும்...