×

சென்னை விமான நிலைய பயணிகள் ஓய்வறையில் தமிழ் பத்திரிகைகள் புறக்கணிப்பு: இந்தி மட்டுமே இருந்ததால் எம்பி, பயணிகள் அதிருப்தி

சென்னை: சென்னை விமான நிலைய ஓய்வறையில், பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள வார இதழ்களில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இதழ்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்தி மொழி இதழ்கள், நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டு, ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தியை திணித்து வருவதாக திமுக ராஜ்யசபா எம்பி வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா திமுக எம்பி வில்சன், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 4ல் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் சென்று அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த வார இதழ்களை எடுத்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அந்த டெர்மினல் 4ல், பயணிகள் ஓய்வு அறையில் வைக்கப்பட்டிருந்த வார இதழ்களில், இந்தி மொழியிலான இதழ்கள் மட்டுமே இருந்துள்ளது. தமிழ் இதழ்கள் எதுவுமே இல்லை. இதையடுத்து கோபமடைந்த எம்பி வில்சன், சென்னை விமான நிலைய டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து பதிவை வெளியிட்டிருந்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையத்தில், நான் இதழ்களை படிக்க எடுத்தபோது இந்தி நூல்கள் மட்டுமே இருக்கிறது. இது டெல்லி விமான நிலையம் அல்ல. சென்னை விமான நிலையம். சென்னை விமான நிலையத்தில் தமிழ் உள்ளிட்ட, மாநில மொழி நூல்களுக்கு இடமே இல்லை. ஆனால் இந்தி மொழி நூல்களை அதிக அளவில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒன்றிய அரசு இதைப்போல், வலுக் கட்டாயமாக, இந்தியை திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கடுமையாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கும் இந்த தகவலை தெரியப்படுத்தினார்.

இதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் டுவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளனர். அதில், நாங்கள் மொழி வேறுபாடு எதுவும் பார்க்கவில்லை. அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே கருதுகிறோம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி பத்திரிகைகள், வார இதழ்கள் போன்றவைகளை வைத்திருக்கிறோம். நீங்கள் வந்து பார்க்கும் போது, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி பத்திரிகைகள், வார நூல்களை, மற்ற பயணிகள், விமானத்திற்குள் வைத்து படிப்பதற்காக, கையில் எடுத்து சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.  ஆனாலும், தமிழ்நாட்டில், சென்னை விமான நிலையத்தில் கூட தமிழ் நூல்கள், இதழ்களை படிக்க வைக்காதது கண்டிக்கத்தக்கது என்று எம்.பி வில்சன் மற்றும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

The post சென்னை விமான நிலைய பயணிகள் ஓய்வறையில் தமிழ் பத்திரிகைகள் புறக்கணிப்பு: இந்தி மட்டுமே இருந்ததால் எம்பி, பயணிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Chennai airport lounge ,EU government ,Rajya Sabha ,
× RELATED பன்னாட்டு முனைய வருகை உள்பகுதியில்...