×

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாள் விழா இன்று காலை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குருபீடம், கருவறை, சப்த கன்னிகள், காளி கோயில், ஓம் மேடை, நாகபீடம் சித்தர் பீடம் முழுவதும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 1ம் தேதி காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கும் அபிஷேகம், ஆராதனை நடத்தினர். நேற்று காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாரின் தங்கரத தேர் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்துகொண்டு பாத பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதையடுத்து துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், கோ.ப.அன்பழகன், தேவி ரமேஷ் ஆகியோர் பாதபூஜை செய்தனர். இன்று காலை பங்காரு அடிகளாரின் இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பங்காரு அடிகளாரின் சின்ன திருவுருவச் சிலையுடன் தஞ்சை, திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர், நாகை, சேலம் மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட செவ்வாடை பக்தர்களின் புடைசூழ நையாண்டி மேளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், காவடி நடனம் உள்ளிட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மாபெரும் ஊர்வலம் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வரை நடைபெற்றது. இதன்பிறகு குருபீடத்தில் உள்ள பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலைக்கும் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களும் தொழிலதிபர்களும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத பூஜை செய்தனர். இதில், லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், செவிலியர் கல்லூரி தாளாளர் லேகா செந்தில்குமார், ஆதிபராசக்தி அறநிலையின் தலைமை செயலக அதிகாரி அகத்தியன், டாக்டர் மதுமலர், டாக்டர் மோன லட்சுமி கலந்துகொண்டனர். இன்று மாலை 5 மணி அளவில் மக்கள் நலத் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இதில் 4 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும் ஆதிபராசக்தி இயக்கத்தின் சேலம், நாமக்கல் மாவட்டபொறுப்பாளர்களும் தொண்டர்களும் செய்துள்ளனர்.

 

The post ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Spiritual Guru Bangaru Adigal ,Adhiparasakthi ,Siddhar Peetham ,Chennai ,Adhiparasakthi Siddhar Peetham ,Melmaruvathur Adhiparasakthi Siddhar Peetham ,Adhiparasakthi Siddhar ,Peetham ,Spiritual Guru Bangaru ,Adigal ,
× RELATED ஆதிபராசக்தி கோயில் ஆண்டு விழா