திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், எம்ஜிஆர் நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சாத்தாங்காடு ஏரி உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிரம்பியிருக்கும். இதனால் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். மேலும் ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் நீர் வற்றாமல் இருப்பதால் மே, ஜூன் மாதங்களில் பல வகையான வெளிநாட்டு பறவைகள் ஏரிக்கு வரும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏரியின் கரையில் இருந்த முட்செடி, கொடிகள் அகற்றப்பட்டு கரை அமைக்கப்பட்டன.
இந்நிலையில் சாத்தாங்காடு ஏரியை சீரமைத்து பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி திட்டமிட்டு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்த மண்டல கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.33 லட்சம் செலவில் இப்பபணியை மேற்கொள்ள ஆவண நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிடப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியை சீரமைக்கவும், சரணாலயம் அமைக்கும் திட்டமும் பல மாதங்களாகியும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே திட்டமிட்டபடி பறவைகள் சரணாலய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவொற்றியூர் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள சாத்தாங்காடு ஏரி 500 ஆண்டுகள் பழமையானது.
சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒரு காலத்தில் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் ஏரி நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் தற்போது ஏரியின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் மழை சேமிக்கும் பகுதியாக இருந்த ஏரி தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் சேறும் சகதியமாய் தூர்ந்து உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பறவைகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநக ராட்சி விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
The post சாத்தாங்காடு ஏரியில் பறவைகள் சரணாலய திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.