×

ஓசூரில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள்: 5 பேர் போக்சோவில் கைது

ஓசூர்: ஓசூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அக்கா, தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பள்ளி மாணவர்கள் உள்பட 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு பள்ளியில், 13 வயதுடைய மாணவனும், 14 வயதுடைய 3 மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கட்டிடவேலைக்கு சென்று வரும் 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சிறுவன், அப்பகுதியில் உள்ள கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகளை திருடிச் சென்று விற்பனை செய்து, அந்த பணத்தில் நண்பர்களான பள்ளி மாணவர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுவர்கள் 5பேரும், அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வரும் ஒரு இடத்திற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அருகேயுள்ள வீடு ஒன்றில் 9 மற்றும் 13 வயதுடைய அக்கா, தங்கையான 2 சிறுமிகள் தனியாக விளையாடி கொண்டிருந்தனர்.

இதை கவனித்த அந்த சிறுவர்கள் 5பேரும், அங்கு சென்று அந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள், வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 13 வயது சிறுவன், 14 வயதுடைய 3 சிறுவர்கள், 15 வயது சிறுவன் என 5 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post ஓசூரில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள்: 5 பேர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Ozur ,Boxo ,Osur ,Osur, Krishnagiri district ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...