×

திமுக கூட்டணி உடையும் என்று கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை எஸ்சி, எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு சார்பில் மாநில அரசு பணிகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ)வை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சென்னை வள்ளூவர் கோட்டம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வருகிற 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறு வரையறை நடைபெற உள்ள சூழலில் 2026க்கு பிறகு காலக்கெடு முடிகிறது. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்து நாடாளுமன்ற தொகுதி மறுவரை செய்ய தேர்தல் ஆணையம் கட்டாயத்தில் உள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிறவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை.

இந்தி மொழியை திணிப்பது, இந்தியை கட்டாயமாக்குவது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை உருவாக்குவதற்கான சதி. இதை முறியடிக்க இருமொழிக் கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டில் பல தனிநபர்கள் எத்தனையோ மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். அதனை யாரும் எதிர்க்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கூட்டணி பேரத்தை துவங்கவில்லை. அது வியூகம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்குவார்கள். திமுக கூட்டணி உடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர்களின் ஆசை நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக கூட்டணி உடையும் என்று கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,DMK alliance ,VSC ,Thirumavalavan ,Chennai ,Former minister ,DMK ,Tamil Nadu Government All Department SC and ,ST Employees' Federation ,SC ,ST ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...