திருப்போரூர், பிப்.28: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவர், தனக்கு சொந்தமான அதே கிராமத்தில் 40 சென்ட் நிலம் உள்ளதாகவும், அதற்கான அசல் ஆவணங்கள் மழை வெள்ளத்தில் காணாமல்போய் விட்டதாகவும், அந்த நிலத்திற்கு தன் பெயரில் வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் காசி தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தது.
இதுகுறித்து, விசாரிக்க வண்டலூர் வட்டாட்சியர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை நடத்திய விசாரணையில், மனுதாரர் பட்டா வழங்கக்கோரிய இடம் அரசு புறம்போக்கு இடம் என்பதும், 1911ம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானம் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், தனக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் அடங்கிய புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பதில் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பதிலை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பட்டா வழங்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவரது ஆக்கிரமிப்பையும் அகற்ற உத்தரவிட்டது. அதன்படி, வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா முன்னிலையில் வருவாய்த்துறையினர், நேற்று புதுப்பாக்கம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 40 சென்ட் இடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
The post புதுப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.