×

தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைப்பதை எதிர்த்து தென் மாநிலங்கள் கூட்டு போராட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அநீதிக்கு எதிராக தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள விளக்கம் நம்பத்தகுந்ததல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, மக்கள் தொகை உயர்வை கட்டுப்படுத்தியதற்காக 39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும் நிலை உருவாகும். இதேபோல், கேரளா 8 தொகுதிகளையும், ஒருங்கிணைந்த ஆந்திரா, தெலங்கானா 8 தொகுதிகளையும், கர்நாடகா 2 தொகுதிகளையும் இழக்கும். அதேநேரத்தில் மக்கள்தொகை அதிகமாக உள்ளதாக கூறி, உபி, மபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் வருகிற 5ம் தேதி கூட்டியுள்ளார். தொகுதி மறு சீரமைப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சி செயல்தலைவர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விளக்கம் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தொகுதி மறு சீரமைப்பில் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது, மேலும், தமிழகத்தில் ஒரு எம்.பி தொகுதி கூட குறையாது என்றார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்தை பார்க்கும்போது, ​​அவருக்குத் தகவல் சரியாக கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இல்லையெனில் கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களான தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்ற தீய எண்ணம் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அநீதியை தவிர்க்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் தென் மாநிலங்கள் பயனுள்ள நடவடிக்கைகள் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் வளர்ச்சிப் பாதையிலும் முன்னேறியுள்ளன.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இன்னும் வளர்ச்சிப் பாதையில் தள்ளாடுகின்றன. எனவே, 2026ல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை உயர்வை கட்டுப்படுத்திய கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அது இல்லாமல் வட மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குத் தெரியாதா? தொகுதி மறுவரையறையின் போது தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்க ஒன்றிய அரசு அனுமதிக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது நம்பத்தகுந்ததல்ல.

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் குறித்து பல ஆய்வுகள் உள்ளன. இவற்றின்படி, சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (2021 அல்லது 2031) அடிப்படையில் மட்டும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட்டால், கர்நாடகாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 28ல் இருந்து 26 ஆக குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், ஆந்திரா, தெலங்கானாவில் 42ல் இருந்து 34, கேரளாவில் 20ல் இருந்து 12, தமிழ்நாட்டில் 39ல் இருந்து 31 என்ற வகையில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.

உத்தர பிரதேசத்தில் 80ல் இருந்து 91 தொகுதிகளாகவும், பீகாரில் 40ல் இருந்து 50 ஆகவும், மத்திய பிரதேசத்தின் எண்ணிக்கை 29ல் இருந்து 33 ஆகவும் உயரும். இந்த அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாது. கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்காமல் இருக்க கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்கள் தொகை அளவுகோலைக் கைவிட்டு, தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாச்சாரப்படி அதிகரிக்க வேண்டும்.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தொகுதி மறுசீரமைப்பில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால், தங்கள் கட்சியின் கொடியை எதிர்த்து நிற்கும் தென் மாநில மக்களைத் தண்டிக்கும் தீய எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. கர்நாடக மக்கள் பாஜவை ஆதரிக்காவிட்டால் நரேந்திர மோடியின் ஆசிர்வாதம் அம்மாநிலத்திற்கு இருக்காது என பாஜ தலைவர் ஜே.பி. நட்டா, சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது எச்சரித்தது கர்நாடகாவுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் உண்மையாகி வருகிறது.
வரிப் பகிர்வு, ஜிஎஸ்டியில் அநீதி, இயற்கைப் பேரிடர் நிவாரணம், அரசுக்கு முள்ளாகத் திகழும் புதிய கல்விக் கொள்கை, யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் என ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசை தண்டிக்கும் தீய நோக்கத்துடன் இருப்பது தெளிவாகிறது.

இந்த அநீதிக்கு எதிராக தேசிய அளவில் குரல் எழுப்புவதைத் தடுக்க நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரலை மேலும் வலுவிழக்கச் செய்யும் தீய நோக்கத்துடன் ஒன்றிய பாஜ அரசு இப்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கன்னடர்களும், சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றிய அரசால் கர்நாடகாவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த தென் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில், அநீதியை எதிர்கொள்ளும் அனைத்து மாநிலங்களுடனும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

The post தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைப்பதை எதிர்த்து தென் மாநிலங்கள் கூட்டு போராட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : states ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,MLA ,Southern States ,Lok Wai Constituency Reorganization ,Tamil Nadu ,EU Government ,K. ,Sidharamaya ,Stalin ,Dinakaran ,
× RELATED கிராமங்களின் பாதுகாப்பு அரணாக...