திருப்பூர்: திருப்பூரில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வட மாநில தொழிலாளர்களுக்கும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இங்கே இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி விலை நிர்ணயிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு தொடர்ந்து கடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பூரில் முழு நேர, பகுதி நேர, மகளிர் சுய உதவிக் குழுக்களை கொண்டு இயங்கும் என சுமார் 1160 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 7.99 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவை மட்டுமல்லாது ஒரே ரேஷன் ஒரே நாடு என்ற திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களும் இங்கு ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருப்பினும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி கள்ளச் சந்தையில் விலைக்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வறுமையை போக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்போடு அனைத்து பகுதிகளிலும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. குடி பெயர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாது என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எங்கிருந்தும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டத்தை அமல்படுத்தியது.
இதன் காரணமாக திருப்பூரில் தங்கி உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கார்டுகள் மூலம் பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு முன்னர் திருப்பூர் குடும்பத்துடன் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களிடமிருந்து ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு விலை கொடுத்து பெற்று சமைத்து உண்டு வந்தனர். பின்னர் அவர்களாகவே ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுகளை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் தற்போது ரேஷன் அரிசி பல்வேறு குழுக்கள் மூலமாக பெறப்பட்டு ஒன்று திரட்டி மொத்தமாக கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. சரக்கு ஆட்டோ,வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமல்லாது ரயில்கள் மூலம் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் திருப்பூர் மட்டுமல்லாது பல்வேறு ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசாரால் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் காரணமாக முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்ய முடியாவிட்டாலும்கூட புரோக்கர்கள் மூலம் ரேஷன் கார்டு தாரர்கள் சிலரிடமிருந்து அரிசி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வெளி மாநிலங்களில் 15 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ரேஷன் அரிசி மொத்தமாக வாங்கிய செல்பவர்களை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தும் வருகின்றனர்.
ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது பொதுமக்கள். தாங்களாகவே இது தவறு என உணர்ந்து ரேஷன் அரிசியை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல்கள் இருந்தால் தங்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தி வருவதாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருப்பூரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக பல்வேறு ரேஷன் கடைகளில் 22ம் தேதிக்கு மேல் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மாதக் கடைசிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இச்சூழலில் ரேஷன் அரிசியைப் பெற்றுக் கொள்ளும் சிலரும் அதனை விற்பனை செய்கின்றனர். இவை முழுமையாக கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி மட்டுமல்லாது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கோழிகளுக்கு தீவனமாகும் ரேஷன் அரிசி?
மேற்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழிலாளர்களை சில நிறுவனங்களை தங்கள் விடுதிகளில் தங்க வைத்து அவர்களுக்கான உணவுகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான விடுதிகள் வட மாநில தொழிலாளர்களுக்கு வெளியிலிருந்து பெறப்படும் ரேஷன் அரிசிகளை பயன்படுத்தி உணவு சமைத்து விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. நாமக்கல் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கு உணவளிக்கவும் ரேஷன் அரிசி பெறப்படுகிறது. மேலும் பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதன் மூலம் கூடுதல் லாபம் பெறுவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
சிறை தண்டனை
ரேஷன் அரிசி கடத்தும் நபர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுவதோடு ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவும் சட்டவிதிகள் உள்ளது.
The post வறுமையைப் போக்க வழங்கும் ரேஷன் அரிசி வணிகமாக்கப்படுகிறது? திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு appeared first on Dinakaran.