×

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மக்களை கடிக்கும் நாய்களை பிடிக்க சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில் பதாகை, பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் பாதுகாப்பு துறை நிறுவனங்களும் ரயில்வே பணிமனை, இந்திய உணவு கழகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய விமான படை பயிற்சி மையங்களும் உள்ளன. மேற்கண்ட பகுதியில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிக்கின்றன.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; ஆவடி மாநகர பகுதியில்  சாலையில் நடந்துசெல்லும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனங்களில் வரும் தனியார் ஊழியர்கள், டியூசன் முடிந்து வரும் மாணவர்கள் ஆகியோரையும் கடித்து குதறிவிடுகிறது. நாய்கள் விரட்டும்போது வாகனங்களில் இருந்து விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேற்கண்ட பகுதியில் உள்ள பாஸ்ட் புட், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை நாய்கள் சாப்பிட்டு வெறிக்கொண்டு அலைகிறது. இதனால் நாய்கள் கடித்து உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இரவுநேரங்களில் தெருக்களில் நாய்கள் ஒன்றாக சேர்ந்து ஊழையிடுகின்றன. இதனால் குடியிருப்பு வாசிகளின் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர். இவ்வாறு கூறினர். சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’ஆவடி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இனபெருக்கத்தை கட்டுப்படுத்திட அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. இதனால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட நாய்கள் உள்ளன. நாய்கள் கடித்தால் சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்லும் நிலைமை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது நாய்களை பிடித்து அப்புறப்படுத்தல், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் ஆகிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் தற்போது நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனிமேலாவது நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யவேண்டும்’ என்றனர்….

The post ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மக்களை கடிக்கும் நாய்களை பிடிக்க சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Avadi Corporation ,Aavadi ,Aavadi Corporation ,Tirumullaivayal ,Annanur ,Kovil ,Patagai ,Pattabiram ,Mittinamalli ,Muthaputuppet ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல்...