×

மகா சிவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு: பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்


மதுரை: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று மாலை முதல் இன்று (பிப்.27) அதிகாலை வரை நடை திறக்கப்பட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி கோயில்களில் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேசுவரர் நடை நேற்று மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, அதிகாலை வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுந்தரேஸ்வரருக்கு நேற்று இரவு 11,45 மணிக்கு முதல்கால பூஜையும், 12.45 மணிக்கு 2ம் கால பூஜையும், அதிகாலை 1.45 மணிக்கு 3ம் கால பூஜையும், 2.45 மணிக்கு 4ம் கால பூஜையும் நடத்தன.

நேற்று அதிகாலை 3.45 மணிக்கு அடுத்த ஜாமபூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடத்தப்பட்டன. மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில், தெப்பக்குளம் முக்தீசுவரர் கோயில், சிம்மக்கல் சொக்கநாதர் கோயில், தெற்கு வாசல் தென்திருவாலவாய சுவாமி கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமுறை நாதர் சுவாமி கோயில், ஆமூர் ஐயம்பொழில் ஈஸ்வரர் கோயில், சோழவந்தான பிரளயநாதர் கோயில், திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோயில், மன்னாடிமங்கலம் மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில், சோழவந்தான் பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு சிவாலயங்களில் திருவிளக்கு பூஜையும், சங்கு அபிஷேகமும் நடத்தப்பட்டது. மதுரை, பந்தடி 5வது தெருவில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் 17வது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

சிவராத்திரியையொட்டி பல்வேறு கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோயில்களில் பொதுமக்கள் திரண்டு, தங்கள் வழக்கப்படி சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பக்தர்கள் நேற்று இரவு குடும்பத்தினருடன் கோயிலில் தங்கியிருந்து பூஜைகள் நடத்தினர்.

வீணை இசை, சொற்பொழிவு…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். இவர்களுக்காக மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருமண மண்டபங்களில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு வழிபாடுகள் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைமையில், அறங்காவலர்கள் பிகேஎம்.செல்லையா, சுப்புலட்சுமி, டாக்டர் சீனிவாசன், மீனா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. வழிபாடுகள் நேற்று மாலை கோயில் நாதஸ்வரக்குழுவினர் ராமகிருஷ்ணன் தலைமையில் மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருமுறை விண்ணப்பம், சிவ வாத்தியம், பரத நாட்டியம், வீணை இசை, ஆன்மிக பட்டிமன்றம், கரகாட்டம், பரத நாட்டியம், குரலிசை, ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று காலை வரை தொடர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன், உதவி கமிஷனர் லோகநாதன், பேஷ்கார் காளிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post மகா சிவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு: பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman temple ,Maha Shivaratri festival ,Madurai ,Madurai Meenakshi Amman temple ,Maha Shivaratri ,Shiva ,
× RELATED மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை...