×

விபத்து காப்பீடு திட்ட சிறப்பு பதிவு வாரம்

தர்மபுரி, பிப்.27: தர்மபுரி அஞ்சலகங்களில், சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் பதிவு செய்யும் வாரம் நாளை வரை நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து, பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக, விபத்து காப்பீடு பதிவு – வாரம் கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாளை(28ம் தேதி) இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தினசரி வேலை செய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின்போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

இதனால், வருவாய் இழப்பு மற்றும் கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். தேவையான ஆவணங்கள் ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின்(நாமினி) விவரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

திட்டத்தின் கட்டண விபரங்கள் ₹320க்கு ₹5 லட்சமும், ₹559க்கு ₹10 லட்சமும், ₹799க்கு ₹15 லட்சமும் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம். தர்மபுரியில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், இத்திட்டத்தினை பதிவு செய்து கொள்ளலாம். தர்மபுரி முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள், கடந்த 24ம் தேதி முதல் நாளை(28ம் தேதி) வரை நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விபத்து காப்பீடு திட்ட சிறப்பு பதிவு வாரம் appeared first on Dinakaran.

Tags : Accident Insurance Scheme Special Registration Week ,Dharmapuri ,Divisional Superintendent ,Posts ,Radhakrishnan ,scheme ,week ,Indian Postal Department ,India Post… ,Dinakaran ,
× RELATED சூரிய சக்தியில் இயங்கும்...