×

பைக்கை நாகர்கோவிலில் பதுக்கி திசை திருப்பிய கில்லாடிகள்: நெல்லையில் மூதாட்டியை கட்டிப் போட்டு நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது

நெல்லை, பிப். 27: நெல்லையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த பின்னரே மர்ம நபர்கள் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லை, வண்ணார்பேட்டை அப்பர்சாமி தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால். காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (87). வேணுகோபால் இறந்து விட்டார். முத்துலட்சுமி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் முத்துலெட்சுமி டீ குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்தவாறு திடீரென வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்த முத்துலட்சுமி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்றார். உடனே மர்மநபர்கள் முத்துலட்சுமியின் வாயில் துணியை வைத்து அமுக்கி, கைகளை கட்டிப் போட்டனர்.

பின்னர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி விட்டனர். அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வழிப்பறி கொள்ளையர்கள் பைக்கில் நான்கு வழிச்சாலையில் கன்னியாகுமரி நோக்கிச் சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி அல்லது கேரளாவிற்கு அவர்கள் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த அன்று மற்றும் அதற்கு 2 நாட்கள் முன்பும் அந்த பகுதியில் வந்து சென்றவர்களின் செல்போன் எண்களையும், சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறிய போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கொள்ளையர்களின் முக அடையாளங்கள் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில் என்ஜிஓ காலனி விரிவு, திருமால் நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி (23), பைனான்ஸ் நிறுவன ஊழியரான வண்ணார்பேட்டையைச் சேர்ந்த முத்துராம் (23) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்கள் 2 பேரும் பைக்கில் சென்று வண்ணார்பேட்டையில் மூதாட்டியிடம் நகைகளை பறித்து விட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அன்றாட வேலைகளை கவனித்து வந்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், போலீசாரை திசை திருப்ப பைக்கில் நாகர்கோவிலுக்குச் சென்று அங்கு ஒரு இடத்தில் பைக்கை மறைத்து வைத்து விட்டு, மீண்டும் பஸ்சில் நெல்லைக்கு வந்ததும், நகைகளை பைனான்ஸ் நிறுவனம் மூலம் பணமாக்க முயன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவத்தில் முத்துராமுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது சக பைனான்ஸ் நிறுவன ஊழியரான ராஜா (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது என்ஜிஓ காலனி விரிவு, மகிழ்ச்சி நகரில் தங்கி இருந்து, திருட்டு நகைகளை அடகு வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதுபோல் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெள்ளப்பாண்டி (23) இவர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டு மூதாட்டியிடம் நகை பறித்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து முத்துராம், வெள்ளப்பாண்டி, சக்கரவர்த்தி, ராஜா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் சக்கரவர்த்தியின் வீட்டில் இருந்த 15 பவுன் நகை, திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post பைக்கை நாகர்கோவிலில் பதுக்கி திசை திருப்பிய கில்லாடிகள்: நெல்லையில் மூதாட்டியை கட்டிப் போட்டு நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vannarpet Apparsamy… ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நெல்லை தனியார் பள்ளியில் மோதல்; 8ம்...