×

நில இழப்பீடு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக கணினி ஜப்தி

ராமநாதபுரம், பிப்.27: கையகப்படுத்திய நிலத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தொகை வழங்காததால், ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கணினியை நீதிமன்றம் ஜப்தி செய்தது. ராமநாதபுரம் பட்டணம்காத்தானைச் சேர்ந்தவர் அகமது ஜலால். இவரது 1.18 ஏக்கர் நிலத்தை 1997ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்தியது. இதற்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.2,500 என நிர்ணயம் செய்திருந்தது. இது போதாது என கூடுதல் தொகை கேட்டு நில உரிமையாளர் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் சென்ட் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டிருந்தது.அந்த தொகையை இரண்டு தவணைகளாக நீதிமன்றம் உத்தரவுப்படி வீட்டு வசதி வாரியம் வழங்கிய நிலையில், மூன்றாவது தவணைத் தொகை ரூ.1.82 லட்சத்தை வழங்காமல் இழுத்தடித்தது.

பின்னர் 2019ல் நீதிமன்றம் அந்தத் தொகையை வழங்க உத்தரவிட்டது. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நில உரிமையாளருக்கு வழங்க வேண்டிய மூன்றாவது தவணைத் தொகையை வழங்காததால், நில உரிமையாளர் அகமது ஜலால் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். கடந்த 13ம் தேதி வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி அகிலாதேவி, ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கணினியை ஜப்தி செய்து, அந்த தொகையை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன்படி நேற்று நீதிமன்ற அமீனா ஆனந்தராஜ் தலைமையில் நீதிமன்ற ஊழியர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பயன்பாட்டில் இருந்து வரும் கணினியை ஜப்தி செய்து எடுத்துச் சென்றனர்.

The post நில இழப்பீடு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக கணினி ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Ramanathapuram ,Tamil Nadu Housing Board ,Ahmed Jalal ,Pattanamkathan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை