×

விவசாயிகளிடம் நெல்கள் தாமதமின்றி கொள்முதல்: கலெக்டர் அறிவுறுத்தல்

கீழக்கரை, பிப்.27: கீழக்கரை வட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பெற்றுக் கொண்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். திருப்புல்லாணி நியாயவிலை கடைக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் பொருட்கள் வழங்க வேண்டுமென பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார். அப்பள்ளி மாணவ,மாணவியரின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்து கலந்துரையாடினார். திருப்புல்லாணியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதன் விபரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து, பதிவேடுகளை பார்வையிட்டு பதிவு செய்து விவசாயிகளிடம் நெல்களை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். திருப்புல்லாணி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிய உணவுகளின் தரம் குறித்து பார்வையிட்டார். மாணவர்கள் தங்கும் அறைகளை பார்வையிட்டு தேவையான வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவுறுத்தினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி, உதவி இயக்குநர் பத்மநாதன், கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹமது, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளிடம் நெல்கள் தாமதமின்றி கொள்முதல்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Keezhakkarai ,Collector ,Simranjeet Singh Kalon ,Thirupullani Panchayat Union ,Simranjeet… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி