×

உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை; ஓமனில் இருந்து படகில் தப்பி கர்நாடகா வந்த 3 தமிழக மீனவர்கள் கைது: கடலோர காவல் படை நடவடிக்கை


உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. மல்பே அருகே நடுக்கடலில் செயின்ட் மேரீஸ் தீவு அமைந்துள்ளது. இந்த நிலையில் மல்பே பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகில் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு சென்றபோது செயின்ட் மேரீஸ் தீவு அருகே ஓமன் நாட்டு படகு ஒன்று டீசல் காலியாகி நின்று கொண்டிருந்தது. இதுபற்றி மீனவர்கள் உடனடியாக கர்நாடக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில் படகில் இருந்த 3 பேரும் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (50), டெரோஸ் அல்போன்சோ (38), திருநெல்வேலியை சேர்ந்த ராபின்ஸ்டன் (50) என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் ஓமன் நாட்டில் மீனவர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அவர்கள் வேலை பார்த்து வந்த ஓமன் நாட்டை சேர்ந்த படகு உரிமையாளர், 3 பேருக்கும் சம்பளம் மற்றும் உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேரும் தங்கள் உயிருக்கு பயந்து உரிமையாளருக்கு சொந்தமான படகில் தப்பி செல்ல முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் மீன்பிடிக்க செல்வதாக கூறி உரிமையாளரின் படகை எடுத்து கொண்டு ஓமனில் இருந்து கடல் மார்க்கமாக தப்பி வந்தனர். அவர்கள் ஓமன் துறைமுகத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிமீ தூரம் கடல் வழியாக பயணித்து இந்தியகடல் பகுதியை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் கரையை நெருங்கிய போது, படகில் டீசல் தீர்ந்துள்ளது. இதனால், நடுக்கடலில் அவர்கள் டீசல், உணவு இன்றி பரிதவித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் மீனவர்கள் வெளிநாட்டு படகை பார்த்ததும், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்து 3 பேரையும் மீட்டுள்ளனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் ஓமன் நாட்டு படகை பறிமுதல் செய்தனர். மேலும், பாஸ்போர்ட்டு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டு படகில் எல்லையை தாண்டியதாக கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து, தமிழக மீனவர்கள் 3 பேரையும் கைது செய்து மங்களூரு சிறையில் அடைத்தனர்.

The post உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை; ஓமனில் இருந்து படகில் தப்பி கர்நாடகா வந்த 3 தமிழக மீனவர்கள் கைது: கடலோர காவல் படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Oman ,Karnataka ,Udupi ,Malpe ,Udupi district ,St. Mary's Island ,Arabian Sea ,St. Mary's… ,Dinakaran ,
× RELATED வட தமிழ்நாட்டில் ஏப்.11,12 ஆகிய தேதிகளில்...