×

டெல்லியில் மார்ச் 4,5ல் ஆலோசனை; தேர்தல் முறையில் சீர்திருத்தமா?.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி


மதுரை: வரும் மார்ச் 4, 5ம் தேதி டெல்லியில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று காலை மதுரை வந்தார். மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர், அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், வாக்குச்சாவடி அலுவலர் பணி, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘மார்ச் 4 மற்றும் 5ம் தேதி டெல்லியில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாநில தேர்தல் அதிகாரி, ஒரு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்து கொள்வார்கள். இதில் தேர்தல் செயல்முறைகள் தொடர்பாக எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக வாக்காளர்கள் எளிமையாக வாக்களிக்கும் வகையில் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

கலாம் நினைவிடத்தில் மரியாதை: ராமநாதபுரத்தில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பின் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தார். அங்கு பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தேசிய நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் உள்ளே 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு அபிஷேக பூஜையுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

The post டெல்லியில் மார்ச் 4,5ல் ஆலோசனை; தேர்தல் முறையில் சீர்திருத்தமா?.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Election Commissioner of ,India ,Madurai ,Gyanesh Kumar ,Dinakaran ,
× RELATED கால் எலும்பு முறிந்த மனைவிக்கு ஏர்...