மதுரை, பிப். 26: ஐகோர்ட் கிளையின் அதிருப்தியை அடுத்து குப்பைகள் அகற்றும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஊரணியில் குப்கைகள் ெகாட்டுவதை தடுத்து ஊரணியை சுத்தப்படுத்தக் கோரிய மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ஐகோர்ட் பின்புறம் உள்ள மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் குவிக்கப்பட்டு மாசடைந்துள்ளது. இதனை சிலர் எரித்து புகை மண்டலமாக்குகின்றனர்.
மதுரை, கோயில் நகரம் என்று அழைக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் குப்பை நகரமாக தற்போது மாறி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதையெல்லாம், மதுரை மாநகராட்சி கண்டு கொள்வதில்லை. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என கூறியிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஒத்தக்கடை சுற்றுச்சாலை அருகே பொடசப்பட்டி கண்மாயில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணியை கலெக்டர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் மோனிகா ரானா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் உள்ளிட்டோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி உத்தரவிட்டனர். மேலும், சாலையின் இருபுறங்களிலும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
சம்பந்தப்பட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வருவதால், இரவு நேரங்களில் இப்பகுதியில் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்து கண்காணிக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ஐகோர்ட் கிளை அதிருப்தியை அடுத்து குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
