×

கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி தொடங்க கோயில் நிலத்தை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

துரைப்பாக்கம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்காக கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், விதிகளை பின்பற்றாமல் சோமநாத சுவாமி கோயில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இந்த நிலத்திற்கு மாதம் 5 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோயிலுக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி, சோமநாத சாமி கோயில் நிலத்தை கபாலீஸ்வரர் கல்லூரிக்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தம் செய்த கடந்த 2022ம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் மாதத்திற்கு 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும். குத்தகை தொடர்பான ஒப்பந்தம் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்லூரிக்காக நிலத்தை குத்தகைக்கு விடும் பரிவர்த்தனையில் நீதிமன்றம் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி தொடங்க கோயில் நிலத்தை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar Temple ,Madras High Court ,Duraipakkam ,Kolathur Somanatha Swamy Temple ,Mylapore Kapaleeswarar Temple ,Chennai ,Dinakaran ,
× RELATED துணைவேந்தர் ஜெகநாதன் போலீஸ்...