×

இந்த ஆண்டு இறுதிக்குள் சவுதி அரேபியாவில் ஐஎஸ்பிஎல்: டி10 லீக் ஆணையர் தகவல்

மும்பை: தெருவில் விளையாடும் இளைஞர்களின் திறன்களை உலகறியச் செய்ய இந்தியன் ஸ்டிரீட் பிரிமீயர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இப்போட்டிக்கென தனியார் தயார் செய்யப்படும் டென்னிஸ் பந்துகளை கொண்டு தலா 10 ஓவர்கள் கொண்ட டி10 போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, நகர், ஐதராபாத், பெங்களூரு என 6 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன. கொல்கத்தா 2024ம் ஆண்டு நடந்த முதல் போட்டியிலும், மும்பை இந்த ஆண்டு நடந்த 2வது போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் அமைப்பின் லீக் ஆணையர் சுரஜ் சமத் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐஎஸ்பிஎல் போட்டிக்கு நாங்கள் நினைத்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாங்கள் எதிர்பார்த்ததை போலவே இந்த தொடர்களில் விளையாடும் வீரர்கள் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தப் போட்டி பிசிசிஐ ஆதரவு இல்லாமல் தான் நடக்கிறது. வருங்காலத்திலும் அவர்களின் ஆதரவை கேட்கும் யோசனை இதுவரை இல்லை. மும்பை, தானேவை தவிர மற்ற நகரங்களில் நடத்தும் திட்டம் உள்ளது. ஆனால் அது அந்தந்த நகரங்களில் கிடைக்கும் பொருளாதார வசதிகள் தான் முடிவுச் செய்யும். இப்போட்டிக்கான ஓவர்களின் எண்ணிக்கையை 20 ஆக மாற்றம் திட்டம் ஒருபோதுமில்லை. அதேபோல் டென்னிஸ் பந்துக்கு பதில் தோல் பந்து பயன்படுத்தவே மாட்டோம். இந்தப்போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து வழக்கமான டென்னிஸ் பந்து இல்லை. சச்சின் ஆலோசனையின் அடிப்படையில் ஐஎஸ்பிஎல் போட்டிக்காக தயாரிக்கப்படும் சிறப்பு பந்துகளாகும்.

கூடவே இந்தியாவில் 85சதவீதம் பேர் டென்னிஸ் பந்துகளை கொண்டுதான் பயிற்சி செய்கின்றனர், விளையாடுகின்றனர். இந்த டென்னிஸ் பந்து டி10 போட்டியை சர்வதேச அளவில் நடத்தவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் சவுதி அரேபியாவில் நடத்தப்படும். அதற்காக சவுதி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐஎஸ்பிஎல் இறுதி ஆட்டத்தை நேரில் வந்து பார்த்தனர். அவர்களுக்கும் மனநிறைவு ஏற்பட்டுள்ளது. அதில் துபாய், அபுதாபி, கத்தார் என சர்வதேச அணிகள் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளன’ என்றார்.

The post இந்த ஆண்டு இறுதிக்குள் சவுதி அரேபியாவில் ஐஎஸ்பிஎல்: டி10 லீக் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISPL ,D10 League ,Saudi Arabia ,Mumbai ,Indian Street Premier ,League ,Dinakaran ,
× RELATED சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்!