ஆலயம்: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி. இறைவன்: நெல் மணிகளை வேலி அமைத்து காப்பாற்றியதால் சிவபெருமான், ‘நெல்லையப்பர்’ என அழைக்கப்படுகிறார்.
காலம்: ஆலயத்தின் ஆரம்ப காலக்கட்டுமானங்கள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனால் (பொ.ஆ.7-ம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘சோழன் தலை கொண்ட வீர பாண்டியன்’ (பொ.ஆ.946-966) திருப்பணி பற்றிய கல்வெட்டு உள்ளது. பின்னர் சோழர்கள் (10-12 ஆம் நூற்றாண்டு), ஹொய்சாளர்கள் (13 ஆம் நூற்றாண்டு), பிற்கால பாண்டியர்கள் (13-14 ஆம் நூற்றாண்டு) மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு) பல பங்களிப்புகளைச் செய்தனர். இந்த சிற்பங்கள் அமைந்துள்ள நந்தி மண்டபம் 1654ல் சிவந்தியப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
காண்டவ தகனம்:
பாண்டவர்கள் தங்களுக்கென புதிய தலைநகராக இந்திரபிரஸ்தம் நகரை உருவாக்க காண்டவ வனத்தை (தற்போதைய தில்லி பிரதேசத்தில் யமுனை ஆற்றின் மேற்கே அமைந்துள்ள பகுதி) தேர்ந்தெடுத்தனர். இந்த காட்டை அழிக்க அர்ஜுனன் அம்பு மழை பொழிந்து, காண்டவ வனத்தை எரித்த போது, அந்த வனத்தில் வசித்த ஏராளமான வன உயிரினங்கள் மாண்டன.‘காண்டவ தகனம்’ என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் அந்நிகழ்வில், ‘அஸ்வசேனன்’ என்னும் பாம்பு தன் தாயை இழந்தது. பாசம் மிகுந்த தன் தாயைக்கொன்ற அர்ஜுனனை பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்து அஸ்வசேனன் ஆவலுடன் காத்திருந்தான்.
நாகாஸ்திரம்:
அர்ஜுனனுக்கு எதிராக ஒருமுறைக்கு மேல் சக்தி வாய்ந்த அழிவு ஆயுதமான நாகாஸ்திரத்தை பிரயோகிக்க மாட்டேன் என்று கர்ணன் தன் தாய் குந்திக்கு வாக்கு அளித்து இருந்தான்.மகாபாரதப் போரின் 16வது நாளில், அர்ஜுனன் கர்ணனுடன் போரிட்டபோது, கர்ணன் ஆபத்தான ‘நாகாஸ்திரத்தை’ அர்ஜுனன் மீது செலுத்துகிறான்.அப்போது அஸ்வசேனன் கர்ணனின் அம்பில் நாகாஸ்திரமாக நுழைந்தான். இந்த பாம்பு அம்பில் நுழைந்தது பற்றி கர்ணன் அறிந்திருந்தான், அறிந்திருக்கவில்லை என இருவேறு கருத்துகள் உள்ளன.அர்ஜுனனைக்காப்பாற்றிய கண்ணன்கடும் போரில் கர்ணன் அர்ஜுனனுக்கு எதிராக நாகாஸ்திரத்தை ஏவிய போது, தேரோட்டிய கண்ணன் அர்ஜுனனின் தேரை முன் யோசனையுடன் யுத்தபூமியின் பள்ளமான பகுதியில் தேரை இறக்கியதால் ‘நாகாஸ்திரம்’ அதன் இலக்கான அர்ஜுனனின் மார்பைத்தவறவிட்டு, தலைக்கவசத்தை மட்டும் உடைத்துக்கீழே தள்ளியதால் அர்ஜுனன் காப்பாற்றப்படுகிறான்.அர்ஜுனனைக்கொல்லும் இம்முயற்சி தோல்வியடைந்த பிறகு, அம்பு திரும்பியதும், கர்ணன் ஏற்கனவே குந்தியிடம் அளித்த வாக்கின் படி அதை ஏற்று திரும்பவும் ஏவ மறுத்தான். அஸ்வசேனன் மேலும் கோபமடைந்து அர்ஜுனனைத் தாக்கினாலும் பின்பு கொல்லப்பட்டான்.
கர்ணனின் போர்க்கோல சிற்பம்
‘கர்ணனின் நாகாஸ்திர பிரயோகம்’ என்னும் மேற்கண்ட இந்நிகழ்வு, நெல்லையப்பர் கோவிலின் முன் மண்டபத்தில் கர்ணனின் நெடிய தூண் சிற்பமாக எழிலுற சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ணன் தனது வலது கையில் அஸ்வசேனன் என்னும் பாம்பை பிடித்திருப்பது, இடது கையில் வில்லுடன் போர்க்கோலத்தில் நின்றிருப்பது, கோபத்தை வெளிப் படுத்தும் கண்கள், முகபாவம், செழுமையான ஆபரணங்கள், ஆடை அணிகலங்கள் என உயிரோட்டமான ஒவ்வொரு அம்சமும் பெயர் தெரியா சிற்பியின் சிற்பத்திறனை எண்ணி வியக்க வைக்கின்றது.
இறைவி: காந்திமதி அம்மன்.
The post கர்ணனின் நாகாஸ்திர பிரயோகம் appeared first on Dinakaran.