- டைடல் பார்க் யூ
- துணை தலைமை உதவி செயலாள
- ஸ்டாலின்
- சென்னை
- பிரதி தலைமை நிர்வாக அதிகாரி
- உதயநிதி ஸ்டாலின்
- டைடல் பார்க்
- ராஜீவ் காந்தி சாலை
- ஈ.சி.ஆர் சாலை
- OMR
- தின மலர்
சென்னை: நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை ராஜிவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரூ.108 கோடியில் யு டர்ன் மேம்பாலம் அமைக்கப்படும் என 2019 ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் கட்டப்பட்டு வரும் 2வது யு டர்ன் மேம்பாலம் இன்று திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ், சிஎஸ்ஐஆர் சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில் யு வடிவ மேம்பாலம் ரூ.27.50 கோடியில் கடந்த 2021ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. 12.50 மீட்டர் நீளமுள்ள 16 கண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மையத் தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும்.
வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கி செல்ல முடியும். அதேபோல் ரூ.12.80 கோடியில் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரை மேற்கு நிழற்சாலையில் குறுக்காக நடைமேம்பாலமும் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டுள்ளது. இதில் இரு முனைகளிலும் நகரும் படிக்கட்டுகளுடன் 5.25 மீட்டர் அகலமும் 155 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு புதிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைக்கின்றனர்.
The post ஓஎம்ஆரில் வாகன நெரிசலை குறைக்க கட்டப்பட்டது டைடல் பார்க் ‘யு’ வடிவ மேம்பாலம் இன்று திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.