×

பல வருடங்களுக்கு முன் பழுதடைந்ததால் கிராம சேவை மையத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: பெருக்கரணை கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதானதால் ஊராட்சி சம்மந்தமான பணிகள் கிராம சேவை மையத்தில் இயங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு புதிதாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ளது பெருக்கரணை ஊராட்சி. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வகித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சி மையப்பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் இயங்கி வந்தது. பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஊராட்சி மன்ற கட்டிடம் நாளடைவில் பழுதானது. அதன்பின் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இப்பகுதியில் கட்டித் தரப்படவில்லை.  மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டதால் அலுவலகத்தில் இருக்கும் ஊராட்சி சம்பந்தமான பதிவேடுகள் சேதமாகின. இதனால், அதே பகுதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்திற்கு ஊராட்சி பணிகள் மாற்றப்பட்டன.

தற்போது, இந்த கிராம சேவை மையம் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதால் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இப்பகுதி பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு இப்பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post பல வருடங்களுக்கு முன் பழுதடைந்ததால் கிராம சேவை மையத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Grama ,Seva ,Center ,Seyyur ,Porukharanai ,Panchayat ,Seva Center ,Dinakaran ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...