×

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: கல்வியும், மருத்துவமும் எனது இரு கண்கள் என பேச்சு

சென்னை: பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் “கல்வியும், மருத்துவமும் தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழாவில் உரையாற்றும் போது, ‘‘தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சத்யபிரத சாகு முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “கல்வியும், மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது!” கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கவும், சிறந்த மருத்துவக்கட்டமைப்பை உருவாக்கி, அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கக்கூடிய வகையில் உறுதி செய்யவும், பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனுடைய தொடர்ச்சியாகத்தான், நம்முடைய தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுச் சொன்னதுபோல, கடந்த ஆகஸ்ட் 15 விடுதலை நாள் நிகழ்ச்சி கோட்டையில் நடைபெற்றபோது, கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில், முதல் கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தேன். அந்த அறிவிப்பு இன்றைக்கு செயல்பாட்டுக்கு வருவது பெருமகிழ்ச்சியை தருகிறது!

நம்முடைய அரசு, சாதாரண, சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம்தான் இந்த முதல்வர் மருந்தக திட்டம். பொதுமக்கள், தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை மாற்ற வேண்டும், அவர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று இந்த மருந்தகங்களை நாங்கள் திறப்பதற்கு திட்டமிட்டோம். “சுகர், பிபி” என்று சொல்லப்படக்கூடிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து, அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால், அதிகமான செலவு ஆகிறது” என்று பலரும் கவலைப்பட்ட காரணத்தால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம். சொன்னது போன்றே, இன்றைக்கு ஆயிரம் மருந்தகங்களை திறந்திருக்கிறோம்.

இந்த மருந்தகங்களைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது. இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் முடித்தவர்களிடம் இருந்தும், அவர்கள் ஒப்புதலோடு தொழில்முனைவோர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவுச் சங்கமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாவும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப உடனடியாக அனுப்புகின்ற வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. சாலிகிராமத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களில், மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான ஏசி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி என்று எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மருந்து தேவைப் பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனங்கள் மூலம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு 3 கட்டமாக பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், பி.பார்ம், டி.பார்ம் படித்த 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்று கேட்டால், இங்கு பொது மக்களுக்கு 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகி இருக்கக் கூடியவர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும்.

நாட்டிற்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம் என்று முற்போக்கான தொலைநோக்கான நாட்டுக்கே முன்னோடியான அத்தனை திட்டங்களையும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையில் தான் செயல்படுத்தி வருகிறோம்.  இந்த நேரத்தில் நான் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த முதல்வர் மருந்தகங்கள் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்துகின்ற அந்த உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது திறக்கப்பட்டிருக்கும் 1000 மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. பி.பார்ம், டி.பார்ம் படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம். நான் முதல்வனால், இளைஞர்களின் திறன் வளர்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு இதுபோன்ற திட்டங்களால் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்கி வருகிறது. நாம் உருவாக்கும் வாய்ப்புகளால் நமது இளைஞர்கள் உயர்வார்கள்; நமது திட்டங்களால் வளமான நலமான தமிழ்நாடு நிச்சயம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, இ.பரந்தாமன், டாக்டர் எழிலன், துணை மேயர் மகேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் ரெ.தங்கம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்(நுகர்வோர் பணிகள்) எஸ்.பி.அம்ரித் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு செல்லும் வழியில் சென்னை தியாகராயநகர்-பாண்டிபஜாரில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்து விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.

மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த திட்டங்களை நாங்கள் இன்று செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மக்களுக்கான நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை” என்றார்.

The post குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: கல்வியும், மருத்துவமும் எனது இரு கண்கள் என பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து